Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இரண்டு ஊராட்சிகளின் பிடியில் மாட்டி கொண்ட பாவூர்சத்திரம் பகுதி மக்கள் கானல் நீராகி போனது தனிபேரூராட்சி கனவு

* இருதலை கொள்ளி எறும்பாக சிக்கி தவிக்கும் அவலம்

* தரம் உயர்த்தாமல் மாவட்ட நிர்வாகம் பாராமுகம்

பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் தொழிலில் வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாக உள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலும் விவசாயம், விவசாய சார்ந்த தொழிலை மக்கள் நம்பியுள்ளனர். கல்லூரணி ஊராட்சிக்குட்பட்ட பாவூர்சத்திரத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தினசரி சந்தை, வாரச்சந்தை, அரசு கால்நடை மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இரண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகள், காவல் நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், தபால் நிலையம், அனைத்து அரசு கிளை வங்கிகள், தனியார் தொழில் நுட்ப கல்லூரிகள், 3 தனியார் மெட்ரிக் பள்ளிகள், தமிழகத்தில் அரிசி உற்பத்தியில் 2வது இடம் பிடித்து அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நவீன அரிசி ஆலைகள், ஓடு தயாரிக்கும் தொழிற்சாலைகள் என எண்ணற்ற நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

தொழில்கள் நிறைந்த பகுதியாக இருக்கும் பாவூர்சத்திரத்திற்கு ஒரு பேரூராட்சி அந்தஸ்து கூட இதுவரை கிடைக்கவில்லை. நெல்லை-தென்காசி நான்கு வழிச் சாலையில் மையக்கோடாக நிர்ணயித்து இச்சாலைக்கு தென்புறம் கல்லூரணி ஊராட்சி என்றும் வடபகுதி குலசேகரப்பட்டி ஊராட்சி என்று பாவூர்சத்திரம் இருதலைக் கொள்ளி எறும்பாக சிக்கித் தவிக்கிறது. இதனால் பாவூர்சத்திரம் தனிப்பேரூராட்சி கனவு மெய்படாமலே உள்ளது.

இதை விட மக்கள் தொகையில் குறைவான எத்தனையோ கிராமங்கள் ஊராட்சி மற்றும் பேரூராட்சி அந்தஸ்து பெற்று விட்ட நிலையில் பாவூர்சத்திரத்திற்கு மட்டும் பாராமுகம் காட்டப்படுகிறது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் அடிப்படை தேவைக்கோ, கட்டிட வசதி, குடிநீர் வசதி, வாறுகால் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு இரண்டு ஊராட்சிகளிடம் போய் முறையிட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது இரட்டை ஆட்சி முறையை போல் அமைந்துள்ளதால் பாவூர்சத்திரம் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்து பாவூர்சத்திரம் பகுதியை மேம்படுத்த வேண்டியது அரசின் முக்கிய கடமையாக இருக்கிறது. ஆனால் இதுப்பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் இருப்பது பாவூர்சத்திரம் பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் அடிப்படை தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யவும், இப்பகுதி தொழில் வளர்ச்சியில் மேம்படவும் பாவூர்சத்திரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பேரூராட்சி அமைக்கப்பட் வேண்டியது காலத்தின் கட்டாயம். இதனை உணர்ந்து. பாவூர்சத்திரத்துக்கு பேரூராட்சி அந்தஸ்து வழங்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

இதுகுறித்து பாவூர்சத்திரம் சமூக ஆர்வலர் வைரசாமி கூறுகையில், ‘பாவூர்சத்திரம் கல்லூரணி மற்றும் குலசேகரப்பட்டி ஊராட்சியில் உள்ளது. கல்லூரணி ஊராட்சியில் பாவூர்சத்திரம், கல்லூரணி, சின்னதம்பிநாடார்பட்டி, செட்டியூர், பனையடிப்பட்டி, செல்வவிநாயகபுரம், விஏநகர், பஞ்சாண்டியூர், மலையராமபுரம், குருசாமிபுரம், ராமநாதபுரம், திருமலாபுரம் என 25க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது. நிர்வாக வசதிக்காக கல்லூரணியில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியை தனி பேரூராட்சி அல்லது ஊராட்சியாக மாற்றினால் பாவூர்சத்திரம் பகுதி பொதுமக்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.