குடும்ப கஷ்டத்துக்காக அடமானம் வைத்து வட்டியுடன் பணத்தை கொடுத்தும் காரை தராமல் கொலை மிரட்டல்: இருவர் கைது; கூட்டாளி 3 பேர் தலைமறைவு
அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியில் குடும்ப கஷ்டத்துக்காக காரை அடமானம் வைத்து வட்டியுடன் பணத்தை கொடுத்தும் காரை தராமல் கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர். கூட்டாளிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வளசரவாக்கம் அன்புநகர் பகுதியை சேர்ந்தவர் வசந்த பிரியன் (38). இவர், கோயம்பேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், எனது குடும்ப கஷ்டத்துக்காக 5 லட்ச ரூபாய் தேவைப்பட்டதால் 17 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை அடமானம் வைக்க எனக்கு தெரிந்த நண்பர் சென்னை சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கலீல் ரகுமான் (37) என்பவரிடம் அடமானம் வைத்து, 5 லட்ச ரூபாய் வாங்கி தர முடியமா? என கேட்டேன். அதற்கு அவர், கோயம்பேடு ஆழ்வார்திருநகர் பகுதியில் உள்ள அவரது நண்பர் உமேஷ்குமார் (33) என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.
செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது காரின் ஒரிஜினல் ஆர்சி புக், பிளாங்க் செக், பாண்டு பத்திரம் ஆகியவற்றை எடுத்து கொண்டு கோயம்பேடுக்கு வரும்படி கூறினார். அதன்படி அங்கு சென்றபோது பிளாங்க் செக் மற்றும் பாண்டு பத்திரத்தில் கையெழுத்து போடும்படி கூறியபோது, எதற்காக செக் மற்றும் பாண்டு பத்திரத்தில் எதுவும் எழுதாமல் எப்படி கையெழுத்து போடுவது என கேட்டபோது, கையெழுத்து போட்டால் 5 லட்சம் தருவேன். போடவில்லை என்றால் வேறு ஆட்களை பார்த்து கொள்ளுங்கள் என கூறினார்.
வழி இல்லாமல் கையெழுத்து போட்ட பிறகு 2 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்தனர். மீதி 3 லட்சத்தை தருவதாக கூறினர். ஆனால் கடைசி வரை 3 லட்ச ரூபாய் தரவில்லை. பின்னர், வட்டியுடன் சேர்த்து பணத்தை கொடுத்து விட்டு அடமானம் வைத்த காரை கேட்டபோது, நீண்ட நாட்களாக அலைக்கழித்தனர். இதுகுறித்து காவல்நிலை யத்தில் புகார் அளித்தால், என்னையும், குடும்பத்தையும் கொலை செய்துவிடுவோம் என மிரட்டுவதால் மன உளைச்சலில் இருக்கிறேன். எனவே அடமானம் வைத்த எனது காரை மீட்டு மாபியா கும்பலிடம் இருந்து தப்பிக்க எங்க குடும்பத்துக்கு பாதுகாப்பு தரும்படி புகாரில் கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த கலீல் ரகுமான் மற்றும் உமேஷ்குமார் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அடமானம் வைக்கும் கார்களை வாடகை விடுவதாகவும், ஒரு சில கார்களை அதிக விலைக்கு விற்பனை செய்துவிடுவதாகவும் எங்களை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தால், இவர்களுக்கு வேண்டிய போலீசார் தகவல் கொடுப்பதால் உஷாராகிவிடுவார்களாம். இதனால் போலீசாரின் வலையில் சிக்கிக்கொள்ளாமல் நீண்ட நாட்களாக தப்பித்து வந்துள்ளனர். மோசடி செய்து நிறைய கார்களை விற்பனை செய்துள்ளனர். இவர்களது கூட்டாளி சதீஷ்குமார் ரூதீஷ், ஜெயபிரகாஷ் ஆகிய 3 பேர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, உமேஷ்குமார் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது, ஒரிஜினல் ஆர்சி புக் 40, பிளாங்க் செக், பாண்டு பத்திரங்கள், அடமானம் வைத்த கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கலீல் ரகுமான் மற்றும் உமேஷ்குமார் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் மாபியா கும்பல்போல் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வரும் இவர்கள், பணம் சம்பாதிப்பதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்களாம். இவர்களுக்கு எந்த ஒரு அலுவலகமும் இல்லை. இந்த கும்பல் மீது 300க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளன. புகார்களை மீண்டும் தூசி தட்டினால் புதையல்போல் நிறையபேர் கைது செய்யப்படுவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.