திருமண வாழ்க்கை சஸ்பென்சுக்கு மத்தியில் குழந்தையுடன் சிக்கிய ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்: ஒரே வார்த்தையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
நியூயார்க்: உலகப் புகழ்பெற்ற ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான எபி மற்றும் பிரிட்டானி, குழந்தையுடன் இருக்கும் தங்களது மவுனத்தைக் கலைத்து வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த எபி மற்றும் பிரிட்டானி ஹென்சல், உலக அளவில் மிகவும் பிரபலமான ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் ஆவர். இடுப்புக்குக் கீழ் ஒரே உடலைக் கொண்ட இவர்கள், தனித்தனி இதயம், வயிறு மற்றும் முதுகுத்தண்டுகளைக் கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு, இரட்டையர்களில் ஒருவரான எபி, ஜோஷ் பவுலிங் என்ற நபரை 2021ம் ஆண்டிலேயே திருமணம் செய்துகொண்ட தகவல் வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அவர்களது பாலியல் உறவின் இயங்குமுறை குறித்துப் பலரும் கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மினசோட்டா நகரில் இந்த இரட்டையர்கள் ஒரு கைக்குழந்தையை காரில் இருந்து தூக்கிச் செல்லும் புகைப்படங்கள் வெளியானது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை, இரட்டை சகோதரிகளின் குழந்தைதானா என்ற புதிய விவாதத்தை சமூக வலைதளங்களில் தூண்டியது. இந்தச் சூழலில், தங்களைச் சுற்றி எழுந்த விவாதங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எபி மற்றும் பிரிட்டானி தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில், அவர்கள் அந்த குழந்தையுடன் இருக்கும் பல்வேறு நெகிழ்ச்சியான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அந்தக் காணொலிக்கு ‘ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்று ஒரே வார்த்தையில் தலைப்பிட்டுள்ளனர். குழந்தை தொடர்பான புகைப்படம் வெளியான பிறகு, அது குறித்து அவர்கள் மவுனம் கலைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த பதிவு மூலம், தங்களது வாழ்வில் வந்துள்ள புதிய உறவை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகக் கருதி, அவர்களது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பாளர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.