தவெக நிர்வாகிகளின் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் நெரிசலில் சிக்கி போராடிய 111 உயிர்களை காப்பாற்றினோம்: ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பேட்டி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தைகள், பெண்கள் உள்பட 111 பேரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காப்பாற்றியுள்ளனர். அப்போது தவெகவினர் நடத்திய தாக்குதலில் 2 ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் உடைந்தது. ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரை கண்மூடித்தனமாக தாக்கினர். கரூர் பகுதியில் தவெக நடத்திய பரப்புரை கூட்டத்திற்கு காவல்துறை சார்பில் 20 நிபந்தனைகள் வழங்கப்பட்டது. அதில் முக்கியமாக கூட்டம் நடக்கும் பகுதியில் கட்டாயம் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்படி கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கரூரில் கூட்டம் நடந்த பகுதியில் தயாராக 2 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைத்திருந்தனர்.
தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டம் நடக்கும் பகுதியில் 4 மணி நேரம் தாமதமாக இரவு 7.40 மணிக்கு தான் வந்தார். இதனால் 10 ஆயிரம் பேர் வரகூடிய இடத்திற்கு 27 ஆயிரம் பேர் கூடினர். விஜய் வருவதற்கு தாமதம் ஆனதால் வெகு நேரம் தண்ணீர் இன்றி கால்கடுக்க நின்று இருந்த இளம் பெண்கள் சிலர் கூட்டத்தின் இடையே மயங்கி விழுந்தனர். இதனால் அருகில் இருந்தவர்கள் அவசர உதவி எண் மூலம் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். அதேநேரம் கூட்டத்தில் ஏற்கனவே தயாராக தவெக கொடி கட்டி நிறுத்தி வைத்திருந்த ஆம்புலன்ஸ் மயங்கி விழுந்த பெண்ணை மீட்க விஜய் பேசி கொண்டிருந்த போது கூட்டத்திற்குள் வந்தது.
அப்போது பிரசார வாகனத்தின் மீது பேசி கொண்டிருந்த விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதை கவனத்தில் கொண்டு, தங்களது கட்சியினர் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் என்றும் கூட தெரியாமல், கூட்டத்திற்குள் நுழைந்த ஆம்புலன்சை பார்த்து, எனது கட்சி கொடி கட்டி ஆம்புலன்ஸ் வருகிறது, அதை பாருங்கள் என்று கிண்டலாக கூறினார். அதை பார்த்த தொண்டர்கள் ஆவேசப்பட்டு ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்க முயன்றனர். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் நமது நிர்வாகிகள் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் தான் என்று கூறினர்.
அடுத்த சில நொடிகளில் மரத்தின் மீது அமர்ந்து இருந்த தொண்டர்களின் பாரம் தாங்காமல் மரக்கிளை முறிந்து ஜெனரேட்டர் கொட்டகையின் மீது விழுந்தது. அப்போது மரத்தின் அருகில் நின்றிருந்த பொதுமக்கள் மீது தொண்டர்கள் விழுந்ததால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் மக்கள் இடுபாடுகளில் சிக்கி அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். சிலர் மயங்கியவர்களை மீட்க கீழே குனிந்த போது, அவர்கள் மீதும் பின்னால் நின்று இருந்த கூட்டம் ஒரே நேரத்தில் ஓடியதால் அவர்களும் சிக்கி மூச்சு திணறி உயிருக்கு போராடினர்.
இந்த நேரத்தில் கரூர் டிஎஸ்பி ஒருவர் அமராவதி மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 ஆம்புலன்சை உடனே பொதுமக்களை மீட்க வரவழைத்தார். அவர்களும் வேகமாக வந்தனர். ஆனால் தவெகவினர் ஆம்புலன்ஸை மீட்க விடாமல் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தவெகவினரிடம் நிலைமையை கூறி அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். இருந்தாலும் தலைவர் விஜய் கூறியதால் அவர்கள் ஆம்புலன்ஸை உள்ளே விடாமல் வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டதால் 2 ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கினர். ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரை கண்மூடித்தனமாக தாக்கினர். அப்படி இருந்தும், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தவெகவினரின் தாக்குதலை பொருப்படுத்தாமல் மயங்கி உயிர்களை மீட்க வாகனத்ைத சாதுரியமாக இயக்கி பாதிக்கப்பட்டவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளான அமராவதி, அப்போலோ, செந்தில் கேர் மற்றும் கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கடுமையாக போராடியும் அன்று இரவு 38 பேர் உயிர்களை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் 111 பேரை உயிருடன் மீட்டனர். கரூர் கூட்ட நெரிசலில் மீட்பு பணியில் ஈடுபட்ட முருகன் ஆம்புலன்ஸ் சர்வீஸ் உரிமையாளர் சதீஷ்குமார் கூறியதாவது: எனக்கு இரவு 7.45 மணிக்கு அழைப்பு வந்தது. நான் செல்லும் போது சக ஆம்புலன்ஸ் ஒன்றை கருப்பு கலர் காரில் தவெக கொடி கட்டிய 6 பேர் வழிமறித்து, ஒன்றும் இல்லை எதற்கு காலியான ஆம்புலன்சை கூட்டம் நடக்கும் இடத்திற்கு கொண்டு செல்கிறாய் என்று கேட்டு தாக்குதல் நடத்தினர். அதில் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. சிறிய ஆம்னி ஆம்புலன்சுகளை பயன்படுத்தி கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு அமராவதி மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதல் உதவி சிகிச்சை அளித்து மீண்டும் பெரிய ஆம்புலன்ஸ் உதவியுடன் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். நான் 3 பேரை மீட்டேன்.
கரூர் பகுதியில் வேலை செய்பவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தான் சம்பளம் கொடுப்பார்கள். சம்பள நாள் என்பதால் அனைவரும் சம்பளம் வாங்கி கொண்டு விஜயை பார்த்துவிட்டு போய் விடலாம் என்ற நோக்கில் அதிகளவில் கூடிவிட்டனர். நடிகர் விஜய் அவர்கள் கூறியபடி மாலை 3 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து இருந்தால் இவ்வளவு கூட்டமும் இருந்து இருக்காது, இப்படி ஒரு பெரும் உயிர்சேதமும் நடந்து இருக்காது என்றார்.
மீட்பு பணியில் ஈடுபட்ட தீரன் கொங்கு ஆம்புலன்ஸ் டிரைவர் பிரகாஷ் கூறியதாவது: எனது செல்போனுக்கு இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை தொடர்ந்து அழைப்புகள் வந்தது. அதில் பேசிய நபர், கரூர் கூட்டத்தில் பெண் ஒருவர் மயங்கிவிட்டார். அவரை மீட்க வாருங்கள் என்று கூறினர். நான் விரைந்து வந்தேன். அப்போது ஒரு பகுதியில் தவெகவினர் வாகனத்தை உள்ளே விடவில்லை. இருந்தாலும் நான் அதிவேகமாக கூட்டத்திற்குள் சென்று ஒரு குழந்தை உட்பட 3 பேரை மீட்டு அருகில் உள்ள அமராவதி மருத்துவமனையில் அனுமதித்தேன். என் வாழ்நாளில் இதுபோன்ற சம்பவத்தை நான் பார்த்தது இல்லை. எனது நண்பர் மற்றொரு ஆம்புலன்சில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டார். இனி இதுபோன்ற சம்பவம் எதிராளிக்கும் நடக்க கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
மீட்பு பணியில் ஈடுபட்ட தாரணி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஜய் கூறியதாவது: நான் 20 முதல் 25 பேர் வரை மருத்துவமனையில் சேர்த்தேன். அதிகளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதால் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குன்னம் சத்திலிருந்து மேலும் 2 ஆம்புலன்ஸ் நான் வரவழைத்து, கிட்டத்தட்ட 65 பேரை நாங்கள் காப்பாற்றினோம். ஆனால் எனது ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், அப்போலோ மருத்துவமனையில் 2 குழந்தைகள், 8 வயது சிறுவன், 20 வயது இளம் பெண் மற்றும் அமராவதி மருத்துவமனையில் 2 பெண்கள் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மறுநாள் முழுவதும் இறப்பு சம்பவத்தை நினைத்து என்னால் சாப்பிட கூட முடியவில்லை.
மீட்பு பணியில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் லோகேஷ் கூறியதாவது: பாதிக்கப்பட்டவர்களில் 2 பேரை எனது ஆம்புலன்சில் ஏற்றி அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றதால், செந்தில் கேர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்தேன். ஒரு மணி நேரத்தில் எங்களது ஆம்புலன்ஸ் குழு 60 பேர் வரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தோம். இவ்வளவு கஷ்டப்பட்டும் எனது ஆம்புலன்சில் 1 குழந்தை, ஆண் உட்பட 2 பேர் உயிரிழந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.