தர்மபுரி: தர்மபுரியில் நேற்றிரவு நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி பேசியதாவது: விசிக தமிழக அரசியல் கட்சிகளில் தவிர்க்க முடியாத சக்தி என்பதை, நமது கொள்கை பகைவர்கள் அறிந்திருக்கிறார்கள். நாம் ஆளும் கட்சியில்லை. அடுத்த முதலமைச்சர் என்று தம்பட்டம் அடிக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் பல பேர் கிளம்பியிருக்கிறார்கள். நான் தான் முதலமைச்சர் என்று. இன்றைக்கு தேசிய அளவில் ஆபத்தான இயக்கம் என்றால், பாரதிய ஜனதா கட்சி தான் என்று, இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் பேசுகிறார்கள். பாஜ வலிமை பெறுவது நாட்டுக்கு நல்லதல்ல. பாஜ, ஆர்எஸ்எஸ், சங் பரிவார்களை எதிர்க்க வேண்டும் என ராகுல் வெளிப்படையாக சொல்கிறார். பாஜவை வீழ்த்த நமக்கு தேவையான நட்பு சக்தி காங்கிரஸ்தான்- இந்தியா கூட்டணிதான்.
நடிகர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம், நம்மை சீண்டுகிறார்கள். விஜய் வந்தவுடனும் அப்படி சொல்கிறார்கள். நான் பதற்றம் அடைவதாக சொல்கிறார்கள். 90களில் நான் பேசிய பேச்சு, இந்த கத்துக்குட்டிகளுக்கு தெரியாது. விஜய் கட்சி தொடங்கியதும் வெளியே போகிறான் என்றால், அவர்கள் பதர்கள் போன்றவர்கள். ஒன்றிரண்டு பேர் மீது நடவடிக்கை எடுத்தேன். அவர்கள் சங்கிகளோடு சேர்ந்து கொண்டனர். என்னோடு இருப்பவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை கொண்டவர்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை சிதறடித்து, திமுக வெற்றி பெறுவதை தடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதுதான் எடப்பாடி, விஜய்யின் எண்ணம். இதுதான் பாஜகவின் திட்டம். மூன்று பேரும் ஒன்றாகி விடுவார்கள்.
அதிமுக, பாஜ, விஜய் மூவரும் திமுக கூட்டணிக்கு எதிரான கட்சிகள். நம்மை சீண்டுவார்கள். திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்தால், நம்மை சீண்ட மாட்டார்கள். திமுக கூட்டணியில் இருப்பவர்களை சீண்டி வெளியேற வைப்பதுதான் அவர்கள் நோக்கம். தேர்தல் நெருங்குவதால், கவனமாக இருக்க வேண்டும். யாராவது எதையாவது சொன்னால், நீங்கள் சமூக வலைதளங்களில் எழுதக்கூடாது. இவ்வாறு பேசினார்.