தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் விஜய் முன்பு கலவரத்தை தூண்டும் வகையில் ஆதவ் அர்ஜூனா பேச்சு
சென்னை: தவெக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பேசிய விபரங்கள் வருமாறு: கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ்: தமிழ்நாட்டில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு எஸ்ஐஆர் கொண்டு வருவது முற்றிலும் ஏற்கக் கூடியது இல்லை. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பொது சிவில் சட்டம், சிஏஏ, இப்போது எஸ்ஐஆர்.. இப்படி மக்களை கொதிநிலையில் வைத்திருப்பது பாஜக, ஆர்எஸ்எஸ் செயல். தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா: சூழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத நமது கட்சி.
இன்று சூழ்ச்சி என்றால் என்னவென்று முதல் முறையாக கரூரில் பார்த்து, அதனை எதிர் கொண்டுள்ளது. கட்சி தொடங்கி மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்கிறார். இந்தியாவிலேயே நம்பர் 1 என்ற நடிகர் சம்பளத்தை விட்டு விட்டு, அரசியலுக்கு வந்தார். கட்சி தொடங்க வேண்டும், மக்களிடம் செல்ல வேண்டும் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தைரியம் இருந்தா எங்க தலைவன் மேல கை வைங்கடா பார்க்கலாம். என்ன... அதிகாரம் இருந்தா, போலீஸ் இருந்தா... தைரியம் இருந்தா அவர் வீட்டுக்குள்ள போய்டுங்க. நான் சொல்றேன். அமைச்சர்கள தூக்கி எறிஞ்சிட்டு இளைஞர்கள் போய்கிட்டே இருப்பாங்க. காவல்துறையைப் பார்த்து பயப்படுகிறோம்னு நினைக்கிறீங்களா? எங்கள கைது செய்ங்க. நாங்க ஜெயிலுக்குப் போறோம். சுப்ரீம்கோர்ட்டுக்கு கூட போவோம்.
கேள்வி கேட்டா என் மேல ஒரு எப்ஐஆர். நான் புரட்சியை உருவாக்கிட்டேனாம். ஊர்ல இருந்து ஆம்ஸ்சை இறக்கி, ரோட்டுல இறங்கி சுட்டுட்டு இருக்கோம். இதுக்கு ஒரு எப்ஐஆர், இதுக்கு ஒரு மிரட்டலு... தைரியம் இருந்தா என் தலைவன் மேலே கை வையுடா பார்த்திடுவோம். போலீசு இருந்தா... ஒட்டுமொத்த காலேஜ் பசங்களும் உங்க வீடு தேடி வருவாங்க.. ஆயுத எழுத்து படம் பார்த்திருக்கீங்களா...இளைஞர் புரட்சி. அதுதான் 2026ல் உருவாகிட்டு இருக்கு. எங்களுக்கு எந்த பயமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினர். ஏற்கனவே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக ஆதவ் அர்ஜூனா மீது நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார். மீண்டும் கலவரத்தை தூண்டும் வகையில் ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார். இது மீண்டும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
* ‘நக்கீரன் கோபால் சட்டைய பிடிச்சு அடிப்பேன்’
ஆதவ் அர்ஜூனா பேசும்போது, ‘‘ஒரு வாரம், நீதிமன்றம் மற்றும் பத்திரிக்கையாளர்களை கூட சந்திக்க முடியவில்லை. அவர்கள் பேசியதை மட்டும் தான் கேட்க வேண்டுமாம். அதிலும் ஒரு மீசைவச்ச ஒருவர் பேசிட்டு இருப்பார், சட்டையை பிடித்து உன்னை அடிக்கிறேன், வெளியில் வந்து தொடுடா பார்ப்போம், மீடியானா,.... ஒட்டுமொத்த 2 கோடி மக்களின் உணர்வாக இருக்கிறோம். தைரியம் இருந்தால் தொடுங்கள் பார்ப்போம், வேண்டாம் எங்களுக்கு அந்த அரசியல் தெரியாது. ரவுடி அரசியல், கேவலமாக ஒருமையில் பேசக்கூடியது தேவையில்லை’’ என்று கூறினார்.
