சென்னை: தவெகவின் கொள்கை எதிரி பாஜ என்று விஜய் கூறி வரும் நிலையில், அவர் எப்படி பாஜவின் பிடியில் இருக்க முடியும் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது என்றால் அதற்கு அடிப்படை காரணம் காமராஜர் தான். தேசத்தின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம். மகா கும்பமேளாவில் 64 கோடி பக்தர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். தவெக தலைவர் விஜய் பரப்புரையில் மின் தடையை செய்தது யார். கூட்டத்தின் நடுவே செருப்பை வீசியது யார்.
இந்த சம்பவத்தின் போது தமிழக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது. கரூரில் ஆய்வு மேற்கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜ என்று விஜய் கூறி வரும் நிலையில், அவர் எப்படி பாஜவின் பிடியில் இருக்க முடியும். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், விஜய் பேசியது தொடர்பான தகவல் எதுவும் எனக்கு தெரியாது. அவர்கள் இருவரும் பேசியதற்கான ஏற்பாடுகளை நான் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.