சென்னை: கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.
இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து இணையவாசிகள் பலரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் பலர் அவருக்கு எதிராக போஸ்டர்களையும் ஒட்டினர். தொடர்ந்து, சிலர் அவரின் வீட்டின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ஒய் பிரிவு சிஆர்பிஎப் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள மத்திய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக, அவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ஒய் பிரிவு பாதுகாப்பை, மேலும் வலுப்படுத்தும் வகையில் இசட் பிரிவு பாதுகாப்பாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி பரவியது.
இதனை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. அதில், விஜய்க்கு தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புலனாய்வு அமைப்புகளின் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகள் அடிப்படையில், விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், பாதுகாப்பு மட்டத்தை உயர்த்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை எனவும் அமைச்சகம் விளக்கியுள்ளது.