சென்னை: 41 உயிர்களைக் கொன்ற விஜய் பனையூரில் பதுங்கிக் கொண்டு, ‘நீதி வெல்லும் என்று பதிவிடுகிறார் என முரசொலி நாளிதழ் காட்ட்டமாக விமர்சனம் செய்துள்ளது. அதில்; மீட்டிங் என்ற பெயரால் சூட்டிங் நடத்தி விட்டு, சினிமாவில் சும்மா கொல் வதைப் போல, நிஜத்தில் கொன்று விட்டு, லைட்டைப் போட்டு ஆப் செய்து விளையாடும் சேட்டிஸ் மனிதனின் விளம்பரப் பசிக்கு 41 உயிர்களா? சொன்ன நேரத்துக்கு வரத் தெரியவில்லை. காக்க வைத்து காக்க வைத்து. சோறு தண்ணீரைத் தராமல் உடல் வாதையை ஏற்றிவிட்டு, மூச்சுத் திணற வைத்து செத்து விழுபவர்களைப் பார்த்த பிறகும் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டிருக்க கொடூரமான வில்லனாலும் முடியாது. அதை ரசிக்கும் ஒருவரால்தான் முடியும்.
அவர் கேட்டதை விட, பெரிய இடத்தை காவல்துறை தந்தது. அந்த இடத்தை முறையாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும். பொதுவாக, "பெரிய இடம் கேட்டோம். சின்ன இடம் தந்தார்கள்" என்றுதான் காவல்துறை மீது புகார் சொல்லப்படும். ஆனால் விஜய் விஷயத்தில், 'சின்ன இடம் கேட்கிறார்கள், பெரிய இடம் கொடுத்துள்ளோம்' என்பதுதான் பதிலாக அமைந்துள்ளது. பொதுவாக கூட்டம் அதிகமாகி விட்டது என்றால் சொன்ன நேரத்துக்கு முன்னதாகவே தலைவர்கள் வந்துவிடுவார்கள். அதுதான் வழக்கம். ஆனால் விஜய், கூட்டம் நெரிசலாகி. மூச்சு முட்டி, சாகும் வரை பஸ்ஸுக் குள் காத்திருக்கிறார். கருவூருக்கு வந்தவர். சாவூர் வரும் வரை ஊருக்கு வெளியில் பதுங்கி இருக்கிறார். மூச்சு முட்டத் தொடங்கி விட்டது என்றதும் லைட்டை ஆப் செய்து விட்டு, நுழைகிறார்.
இருட்டு பஸ்ஸைப் பார்த்து மிரள்கிறார்கள் ரசிகர்கள். தண்ணீர் கேட்ட ஒருவருக்கு விஜய், தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போடுகிறார். கூட்டத்தில் எதையும் தூக்கிப் போடக் கூடாது என்பது சாதாரணமான லாலிக், ஹீரோ தூக்கிப் போட்டால் கூட்டமே அதைப் பிடிக்கும். இது நல்ல 'ஷாட்' ஆக இருக்கலாம். ஆனால் 'ஷாக்' ஆனது மக்கள்தான். கூட்டத்தின் போக்குக்கு ஏற்ப மக்கள் விழத் தொடங்கியது அதன் பிறகுதான். மிதிபட்டது அதன் பிறகுதான். இது எதையும் கண்டு கொள்ளாமல், கரூரில் இருந்து தப்பினார் விஜய். சம்பவம் நடந்தது செப்டம்பர் 27. இன்று அக்டோபர் 14. அதாவது பதினாறு நாட்களாக வெளியே வரவில்லை. அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அனைவரும் தலைமறைவு ஆனார்கள்.
ஆனால் இன்று விஜய் கட்சி நிர்வாகி என்ன சொல்கிறார் என்றால், போலீஸ்தான் எங்களை ஊரை விட்டுப் போகச் சொன்னார்கள்" என்று. மூன்று நாள் கழித்து வீடியோ வெளியிட்ட விஜய் இதை ஏன் சொல்லவில்லை. 'நான் திரும்ப அங்கே போனால் அதைக் காரணம் காட்டி பதற்றமான நிலையில் அங்கு வேறு சில அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடக் கூடாது என்பதற் காகத்தான் நான் அங்கு மீண்டும் செல்லவில்லை என்று வீடியோவில் சொன்னது விஜய். ஆனால், போலீஸ் சொன்னதால் வந்தோம்" என்று இன்று பொய் சொல்கிறது அவரது த.வெ.க. காவல் துறை போகச் சொல்லி இருந்தால், அதையே பெரிய பிரச்சினை ஆக்கி இருக்க மாட்டார்களா?
உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்த வழக்குகளில்தான் எத்தனை தில்லுமுல்லுகள். தகிடுதத்தங்கள். பிராடுத்தனங்கள். அந்தக் கட்சியையே தமிழக பிராடுகள் கட்சி என்று சொல்லும் அளவுக்கு அத்தனை பிராடுகளை அரங்கேற்றினார்கள். 41 பேர் இறந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று வழக்கு போடுகிறார் பன்னீர்செல்வம் என்பவர். 'என் மகனைப் பறி கொடுத்துவிட்டேன்' என்று இவர் சொல்கிறார். இவர் தனது மகனை பரிதவிக்க விட்டு விட்டுப் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்று பன்னீர்செல்வத்தின் மனைவி சர்மிளா பேட்டி தருகிறார். அவர் கேஸ் போட்டதே எனக்குத் தெரியாது. என் பையனுக்கு ஒண்ணே கால் வயசு இருக்கும் போதே விட்டுட்டு போயிட்டாரு.
பணத்துக் காக இவ்வளவு கேவலமான வழக்கு போட்டுள்ளாரு. பையன் இறந்ததுக்கு ஐந்து நிமிசம்தான் இருந்தாரு. எட்டு வருஷமா அவர் பையனை பார்த்ததே இல்லை' என்கிறார் சர்மிளா. கரூர் சம்பவத்தில் தனது மனைவி சந்திராவை இழந்தவர் செல்வராஜ். அவர் பெயரில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதும், செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார். 'நான் எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை' என்கிறார். இந்த செல்வராஜை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஏமாற்றி கையெழுத்து வாங்கி இருக்கிறார். 'அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர், முன்னான் ஊராட்சி மன்றத் தலைவர் பாலகிருஷ்ணன் என்பவர். மூலம் என்னை ஏமாற்றி போலியாக கையெழுத்து பெற்று விட்டார்கள்.
வேலை வாங்கித் தருவதாகச் சொன்னதால்தான் கையெழுத்து போட்டேன்' என்கிறார் செல்வராஜ் இதனை உச்சநீதிமன்றத்திலேயே சொல்லி இருக்கிறார் செல்வராஜ் 'இது குறித்து நாங்கள் விசாரிப்போம்' என்று சொல்லி இருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள். கரூர் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்கட்டும் என்று சொல்லி இருக்கிறது உச்சநீதிமன்றம். "கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித் திருப்பது இடைக்கால உத்தரவுதான். சி.பி.ஐ. விசாரணை கோரி மோசடியாக மனு தாக்கல் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதும், முந்தைய உத்தரவு ரத்து செய்யப்படும்" என்று மூத்த வழக்கறிஞர் வில்சன் சொல்லி இருக்கிறார். அதற்குள் 'நீதி வெல்லும்' என்று அவசரப்படுகிறார் விஜய்.
கடந்த ஜூலை மாதம் திருப்புவனம் அஜித்குமார் இறந்தது தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய். 'எதற்காக சி.பி.ஐ. பின்னால் ஒளிகிறீர்கள்? சி.பி.ஐ. என்பது ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.யின் கைப்பாவை' என்று சொன்னார். இன்று அவரே கைப்பாவையின் கைப்பாவையாக ஆகி விட்டார். அவரது கட்சியே அவர்களால் உருவாக்கப்பட்டதுதானே? பா.ஜ.க.வை பாசிசம்' என்றும், நரேந்திர தாமோதர் தாஸ் மோடி அவர்களே என்று விஜய் சொல்லி அழைத்த பிறகும் பா.ஜ.க.வுக்கு கோபம் வரவில்லை என்றால் அந்த ஸ்கிரிப்ட் பா.ஜ.க. ஸ்கிரிப்ட் என்றுதானே அர்த்தம்? என்று கூறியுள்ளது.