கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம்தேதி இரவு 7.15 மணியளவில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் நடந்தபோது, 41 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உயிருக்கு போராடினர். உயிருக்கு போராடியவர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஏராளமான தனியார் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆம்புலன்ஸை ஓட்டி வந்த டிரைவரை தாக்கிய சேலம் கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் வெங்கடேசனை கடந்த 9ம்தேதி கரூர் டவுன் போலீசார் கைது செய்து கரூர் ஜேஎம் 1ல் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் உள்ள வெங்கடேசன், தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது வக்கீல்கள் சார்பில் கடந்த 13ம்தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று மாலை கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், வெங்கடேசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல், 41 பேர் பலியான சம்பவத்தில் கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருந்ததாக கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் 29ம்தேதி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் நேற்று மதியழகன் மற்றும் பவுன்ராஜ் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, எஸ்ஐடி தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில், சிபிஐ விசாரணை அதிகாரி வரும் போது நாங்கள் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும். அதுவரை இருவருக்கும் ஜாமீன் வழங்க கூடாது என வாதாடினர். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே காவல் நீட்டிப்பு கேட்பது சரியாகாது என தவெக வழக்கறிஞர்கள் வாதாடினர். இதையடுத்து இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், நீதிமன்ற காவல் நீட்டிக்க கோரும் எஸ்ஐடி கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதி பரத்குமார், மதியழகன் மற்றும் பொன்ராஜ் ஆகிய இருவரையும் தற்காலிகமாக விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.