சென்னை: அதிமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான பாஜ, தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்டு வருகிறது. இதுகுறித்து அமித்ஷா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகிறார். இதனால் இந்த விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜவுக்கிடையே மோதல் எழுந்துள்ளது.
இந்நிலையில் அதிமுக கூட்டணிக்கு முக்கிய கட்சி ஒன்று வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதனால் தற்போது கூட்டணி அமைக்காமல் இருப்பது தவெகவும், நாம் தமிழர் கட்சி மட்டுமே. அதில் சீமான், தனித்து களம் காண்போம் என்று அறிவித்து விட்டார். ஆனால் நடிகர் விஜய் கட்சிக்கு மட்டும் கூட்டணி கிடைக்காமல் உள்ளது. இதனால் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவும், தவெகவும் பேசுவதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஆனால் இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசாமல் உள்ளனர். இதனால் தேர்தல் நேரத்தில் பாஜவை கழட்டி விட்டு விட்டு, தவெகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜய்யின் தவெகவுடன் கட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்றபோது, தேர்தல் வியூகங்களை இப்போது வெளியில் சொல்ல முடியாது என்று கூறினார்.
அதிமுக, பாஜ கூட்டணிக்கு விஜய் வருவாரா என்றபோது, யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் நடிகர் விஜய்யுடன் கூட்டணி குறித்து நேரடியாக பதில் அளிக்காமல் மழுப்பலாக பதில் அளித்திருப்பது பாஜவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.