திருச்சி: தவெகவுடன்கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளை பேசுவதும், கற்பனையாக பேசுவதும் அண்ணாமலைக்கு வாடிக்கையாக உள்ளது. சமூக பதட்டத்தை உருவாக்குவதில் அவர் குறியாக இருக்கிறார். விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்பட போகிறது என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
கரூர் சம்பவத்தை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை செய்வது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் என்ன பின்னணியில் விசாரிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. நீதிபதிகள் தான் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.தவெகவுடன் கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி. அதிமுகவும், பாஜவும் கூட்டணியில் இருக்கும் சூழலில் விஜய் தன் கொள்கை எதிரியாக கூறும் பாஜ அங்கு வகிக்கும் கூட்டணியில் இடம் பெறுவாரா என்பது தெரியவில்லை. அப்படி கூட்டணி வைத்தால் பாஜவை கழற்றி விட அதிமுக தயாராக இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது. இவ்வாறு கூறினார்.