Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தவெக நிர்வாகிகள் பிடிவாதத்தால் விபரீதம் டிஎஸ்பி சொன்னதை கேட்டிருந்தால் இவ்வளவு உயிரிழப்பு நடந்திருக்காது: ஏடிஜிபி பேட்டி

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், மாவட்ட கலெக்டர் தங்கவேல், மின்வாரிய மண்டல தலைமை பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தினர் எந்த பகுதி, எந்த இடத்தை தேர்வு செய்கிறார்கள் என்று கடந்த 23ம் தேதி அனுமதி கேட்டனர்.

முன்னதாக லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டிருந்தனர். அங்கு அமராவதி ஆறும், பெட்ரோல் பங்க், பாலமும் உள்ளது. இது மிகவும் ஆபத்தான பகுதி அங்கு அதிகளவில் கூட்டம் கூடினால் ஆபத்து என அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடுத்த நாள் உழவர் சந்தை, ரவுண்டானா பகுதிகளை கேட்டனர். இங்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் இருந்ததால், பின்னர் வேலுச்சாமிபுரம் பகுதியை கேட்டு அவர்கள்தான் விண்ணப்பித்தனர். கடந்த 26ம் தேதி அந்த இடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. காவல்துறை பாதுகாப்பு குறைவாக இருந்ததாக கேள்வி எழுகிறது.

பொதுவாக, கூட்டத்தை கண்காணிக்க 10 சதுர அடியில் 1 ஆள் நிற்கும் அளவு சாதாரண கூட்டமாகவும், 6 சதுர அடியில் ஒரு ஆள் நின்றால் அது சற்று கூட்டம் நிறைந்த கூட்டமாகவும், 4.5 சதுர அடியில் ஒரு ஆள் நின்றால் அது அதீத கூட்டம் நிறைந்த பகுதியாகவும் பார்க்கப்படும். இந்த கரூர் கூட்டத்திற்கு 500 காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதாவது ஆபத்து இல்லாத பகுதிகளுக்கு 250 -300 பேருக்கு 1 காவலர் என்ற அடிப்படையிலும், மிதமான ஆபத்து உள்ள பகுதியில் 100 -150 பேருக்கு 1 காவலரும், ஆபத்தான பகுதிக்கு 50 பேருக்கு 1 காவலரும் என பாதுகாப்பு வழங்கப்படும்.

இங்கு 50 பேருக்கு 1 காவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்து. மத்திய மண்டல ஐஜி இங்கு வந்து ஆய்வு நடத்தி இருக்கிறார். கரூரில் எஸ்பி, 4 ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பி, 17 இன்ஸ்பெக்டர்கள், 57 சப்- இன்ஸ்பெக்டர்கள் இருந்தனர். பாதுகாப்பில் ஏதும் குறைபாடு இருந்ததா என்றால் இல்லை. தவெக பிரசாரத்திற்காக திருச்சியில் 650 காவர்கள், அரியலூரில் 287, பெரம்பலூரில் 480, நாகப்பட்டினம் 410, திருவாரூர் 413, நாமக்கல்லில் 279, கரூரில் 500 காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

கரூரில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி வைக்க அறிவுரை வழங்கியிருந்தோம். அப்பகுதியில் இருந்த காவல் குடியிருப்பு அருகே 2 ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டநெரிசல் ஏற்பட்டபோது காவலர்கள் கூடுதல் ஆம்புலன்ஸ் கேட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தது. விஜய் பிரசார வாகனம் தவுட்டுபாளையத்திலிருந்து கரூர் ரவுண்டானாவை கடக்க 2 மணி நேரம் ஆனது. இந்த இடத்தை 30 நிமிடத்தில் கடந்து விடலாம்.

சேவை சாலையில் இருந்து தவெக தலைவர் கையசைத்தபோது தொண்டர்கள் இருபுறமும் இருந்து நகர்ந்துள்ளனர். முனியப்பன் கோயில் கடந்து செல்ல 1 மணி நேரம் ஆனது. அப்போது தொண்டர்கள் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். இதில்தான் ஏதோ குளறுபடி நடத்திருந்தது. இதை காவல்துறை விசாரிக்கும். கல்வீச்சு எதுவும் நடக்கவில்லை.

10,000 முதல் 20,000 பேர் வரை இருந்தாலும், பிரசாரத்தில் கலந்து கொள்பவர்களின் ஒத்துழைப்பு இல்லையெனில் என்ன செய்ய முடியும். போலீசுடன் ஒத்துழைத்து செல்ல வேண்டும். தொண்டர்களுடன் பொறுமையாக பேசியே அழைத்து வர வேண்டி இருந்தது. டவுன் டிஎஸ்பி கூட்ட நெரிசலை பொறுமையாக கடக்க வைத்து பிரசார வாகனத்தை அழைத்து வந்துள்ளார். பேசும் இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் முன்னதாகவே கூட்டம் நடத்தலாம் என டிஎஸ்பி கூறியுள்ளார்.

இருந்தும் கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குறித்த இடத்தில் பேச வேண்டும் என கூறியுள்ளனர். அவர்களை அங்கு அழைத்து சென்றுள்ளார் டிஎஸ்பி. மேலும் அங்கு சென்றபோது தவெக தலைவரை அனைவரும் பார்க்க வேண்டும் என கூடும்போது நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆணையம் முழுவிவரத்தை விசாரணைக்கு பின் தெரிவிக்கும். இவ்வாறு ஏடிஜிபி தெரிவித்தார்.

* ரசிகர்கள் மரத்தில் ஏறியதால் மின்தடை - அதிகாரி விளக்கம்

மின்வாரிய மண்டல தலைமை பொறியாளர் ராஜலட்சுமி கூறுகையில், ‘விஜய் பேசும்போது தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டது. அவர் வருவதற்கு முன்பு மரத்தின் மீது தொண்டர்கள் ஏறியதால், சிறிது நேரம் மின் தடை செய்யப்பட்டது. காவலர்கள் துணையுடன் அவர்களை இறக்கி விட்ட பிறகு மின் வினியோகம் மீண்டும் வழங்கப்பட்டது. அவர் வருவதற்கு முன்பு மரத்தின் மீது ஏறியதால்தான், சிறிது நேரம் மின் தடை செய்யப்பட்டது என்றார்.