தூத்துக்குடியில் மேலும் ஒரு தொழில் பூங்கா.. சுற்றுச்சூழல் அனுமதி கோரும் சிப்காட்: 17,200 பேருக்கு வேலைவாய்ப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடியில் மேலும் ஒரு தொழில் பூங்கா அமைக்க, சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. சென்னை, கோவை, கிருஷ்ணகிரிக்கு அடுத்து, முக்கிய தொழில் மையமாக தூத்துக்குடி உருவெடுத்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் முன்னணி பெற்று வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடியில் அமைய உள்ள தொழில் பூங்காவில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு சிப்காட் விண்ணப்பம் செய்துள்ளது. அல்லிக்குளம், ராமசாமிபுரம், கீழத்தட்டபாறை, மேலத்தட்டபாறை, உமரிக்கோட்டை, பேரூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய கிராமங்கள் இடையே 1,967 ஏக்கரில் சிப்காட் அமைய உள்ளது. ரூ. 667 கோடி செலவில் அமைய உள்ள இந்த தொழில் பூங்கா மூலம் 17,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே சிலாநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் தொழில் பூங்காவுடன் கூடுதலாக இந்த தொழில் பூங்காவும் அமைய உள்ளது.