தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு செல்ல இருந்த மிதவை கப்பலின் தொட்டியில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி: சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதா? என விசாரணை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கற்கள் ஏற்றிச் செல்ல தயாராக இருந்த பார்ஜர் எனப்படும் ராட்சத இரும்பு மிதவை கலன் (மிதவை கப்பல்) தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது 3 தொழிலாளர்கள் பலியாகினர். அவர்கள் விஷவாயு தாக்கி இறந்தனரா? என போலீசார் விசாரிக்கின்றனர். தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு கருங்கற்கள், ஜல்லிகள் மற்றும் கட்டுமான பொருட்கள் தோணி மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றை பெரிய பார்ஜர்கள் எனப்படும் ராட்சத இரும்பு மிதவை கலன்களில் (மிதவை கப்பல்) ஏற்றப்பட்டு மாலத்தீவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த பார்ஜர்களை தனியார் நிறுவனங்கள் சில இயக்கி வருகின்றன. இங்குள்ள ஒரு ஷிப்பிங் நிறுவனம் மூலம் மாலத்தீவுக்கு கருங்கற்கள் ஏற்ற ஒரு பார்ஜர் நேற்று காலை தயாராக இருந்தது.
அதன் கீழ் பகுதியில் உள்ள இரு சமகலன்கள் அமைந்துள்ள தொட்டியில் (டேங்க்) தண்ணீர் தேங்கி கிடந்துள்ளது. இதனை சுத்தம் செய்வதற்காக நேற்று காலை தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் திறந்து வைத்துள்ளனர். பின்னர் அந்த தொட்டியின் மீதுள்ள சிறிய நுழைவாயில் வழியாக நெல்லை மாவட்டம் உவரியைச் சேர்ந்த தொழிலாளி சரோன் ஜார்ஜ் (32) என்பவர் இறங்கியுள்ளார். நெடுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் அவரை தேடி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு தொழிலாளி சந்தீப்குமார் (27) இறங்கியுள்ளார். அவரும் வெளியே வரவில்லை. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலை சேர்ந்த மற்றொரு தொழிலாளி ஜெனிஸ்டன் தாமஸ் (35) இறங்கி சென்றுள்ளார்.
நெடு நேரமாகியும் 3 பேரும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளிகள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு துறையினர், மத்தியபாகம் போலீசார், மரைன் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் அவர்கள் பார்ஜரின் டேங்கிற்குள் செல்லும் மூடியை வெல்டிங் மெஷின் மூலம் வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மழை குறுக்கிட்டதால் குடை மற்றும் பெரிய தார்ப்பாலின் ஷீட் மூலம் மூடி மழைநீர் படாதவாறு டேங்கின் மூடிகளை வெட்டி எடுத்தனர்.
தொடர்ந்து, பெரிய ஏணிகள் மூலம் உள்ளே சென்ற தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தொழிலாளிகள் 3 பேரையும் அடுத்தடுத்து சடலமாகவே மீட்க முடிந்தது. மாலை 5 மணியளவில் மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீண்ட நாட்களாக மூடிக்கிடந்த டேங்கிற்குள் தொழிலாளர்கள் இறங்கியதால் விஷவாயு தாக்கி பலியாகி இருக்கலாமா? அல்லது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.