நாமக்கல்: நாமக்கல் அருகே காவிரி கரையோரத்தில் 9 ஆமைகளை பிடித்து, உயிருடன் எரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அஜித் (26), குமார் (25). நண்பர்களான இருவரும், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு தேங்காய் குடோனில் வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த 8ம்தேதி அனிச்சம்பாளையம் கரையோரத்தில் இருந்த 9 ஆமைகளை, இவர்கள் உயிருடன் பிடித்தனர். பின்னர், அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான குட்டுக்காடு பகுதியில், அந்த ஆமைகளை உயிருடன் எரித்தனர். மேலும், இதை செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்து தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையறிந்த நாமக்கல் வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். பின்னர் குமார், அஜீத் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கறிக்காக ஆமைகளை உயிருடன் எரித்து கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்த வனத்துறையினர், தலா ரூ.50,000 வீதம், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.