ரேணுகாசுவாமி கொலை வழக்கில் திருப்பம்; நடிகையின் ஜாமீன் மனு தள்ளுபடி: சிறைவாசத்தை உறுதி செய்த நீதிமன்றம்
பெங்களூரு: ரேணுகாசுவாமி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகை பவித்ரா கவுடாவின் ஜாமீன் மனுவை பெங்களூரு அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.கர்நாடகா மாநிலம் ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாமீன் வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் உரிய காரணங்களைப் பதிவு செய்யத் தவறிவிட்டது என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பவித்ரா கவுடா உள்ளிட்டோர் மீண்டும் காவலில் வைக்கப்பட்ட நிலையில், அவர் சார்பில் பெங்களூரு அமர்வு நீதிமன்றத்தில் புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று கூடுதல் அமர்வு நீதிபதி முன்பு நடைபெற்றது. அப்போது பவித்ரா கவுடா தரப்பில், பிஎன்எஸ் என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகு, பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதம் என வாதிடப்பட்டது. இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, இந்த வழக்கு 2024, ஜூலை 1ம் தேதிக்கு முன்னர் அமலில் இருந்த சட்டங்களின்படியே நிர்வகிக்கப்படும் என்று தெளிவுபடுத்தி பவித்ரா கவுடாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பவித்ரா கவுடா தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.