Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

புளியந்தோப்பு சரகத்தில் 220 ரவுடிகள் அதிரடி கைது: அதிகாரிகள் நடவடிக்கை

பெரம்பூர்: சென்னையில் குற்ற செயல்களை தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னையிலேயே அதிக சரித்திர பதிவேடு ரவுடிகள் கொண்ட புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 3 காவல் சரகங்கள் வருகின்றன. இதில் எம்கேபி நகர் சரகத்தில் கொடுங்கையூர் மற்றும் எம்கேபி நகர் காவல் நிலையங்களும், செம்பியம் சரகத்தில் செம்பியம், திருவிக நகர், வியாசர்பாடி காவல் நிலையங்களும், புளியந்தோப்பு சரகத்தில் புளியந்தோப்பு, ஓட்டேரி, பேசின் பிரிட்ஜ் ஆகிய காவல் நிலையங்களும் உள்ளன.

மேலும் புளியந்தோப்பு, செம்பியம், எம்கேபி நகர் என 3 மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. புளியந்தோப்பு சரகத்தில் மொத்தம் 353 சரித்திர பதிவேடு ரவுடிகளும், எம்கேபி நகர் சரகத்தில் 299 சரித்திர பதிவேடு ரவுடிகளும், செம்பியம் சரகத்தில் 286 சரித்திர பதிவேடு ரவுடிகளும் என புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் மொத்தம் 938 சரித்திர பதிவேடு ரவுடிகள் உள்ளனர்.

வியாசர்பாடி, எம்கேபி நகர், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆதி ஆந்திரா மற்றும் பர்மாவை சேர்ந்த பலர் வந்து பூர்வ குடிகளாக தங்கி இதில் சிலர் தொடர்ந்து ரவுடிசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் அடித்தட்டு மக்கள் அதிகம். ஆனால், கல்வி அறிவு மிகக் குறைந்த அளவில் இருப்பதால் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனை போலீசார் தொடர்ந்து கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இதனால், புளியந்தோப்பு காவல் மாவட்டம் என்றாலே சில போலீசார் பணியில் வருவதற்கு தயங்குகின்றனர். ஆனால் சமீப காலமாக இந்த காவல் மாவட்டத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளால் பல்வேறு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 30 நாட்களில் 220 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் புளியந்தோப்பு சரகத்தில் 114 பேர், எம்கேபி நகர் சரகத்தில் 81 பேர், செம்பியம் சர்கத்தில் 44 பேர் என மொத்தம் 220 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 9 மாதத்தில் இந்த காவல் மாவட்டத்தில் மொத்தம் 90 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பயந்துள்ளது. தொடர்ந்து சிறைக்கு செல்லும் ரவுடிகள், சிறையிலிருந்து வெளியே வரும் ரவுடிகள், மேலும் சிறு சிறு குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் என பலரும் தொடர்ந்து போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மீண்டும் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களை கண்காணித்து கைது செய்வது மற்றும் அவர்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொடர்ந்து போலீசார் செய்து வருவதாகவும், அதன் அடிப்படையில் இந்த மாதம் ரவுடிகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து 220 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரவுடிகளுக்கு எதிரான வேட்டை தொடரும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* போலீசார் பற்றாக்குறை

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் பல ஆண்டுகளாகவே காவலர் பற்றாக்குறை இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் எடுத்த கணக்கின்படி இந்த காவல் மாவட்டத்தில் 965 பேர் பணியாற்ற வேண்டும். இது தற்போதைய நிலவரப்படி கண்டிப்பாக கூடுதலாக வரும். ஆனால் தற்போது இந்த காவல் மாவட்டத்தில் 510 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

அதிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அயல் பணிக்காக சென்று விடுகின்றனர். மேலும் 87 பேர் உடல்நிலை சரியில்லாமல் தொடர் மருத்துவ விடுமுறையில் இருக்கின்றனர். மீதி உள்ள ஆட்களை வைத்து இந்த காவல் மாவட்டத்தை குற்ற செயல்களில் இருந்து தடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, இந்த காவல் மாவட்டத்தில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.