சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையில் கூட்டணி வலுவாக இருக்கும் சமயத்தில் தமிழக அரசியலில் நிலையான கூட்டணி இல்லாமல் அதிமுகவும், பிற கட்சிகளும் தவித்து வருகிறது. அதன்படி, வருகின்றன தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பாஜ கூட்டணி தற்போதைக்கு அமைந்துள்ளது.
இந்த கூட்டணி எதிரொலியாக ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதலில் அக்கூட்டணியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து அமமுக அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். மேலும் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில்,என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேற நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் தான் காரணம், கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியது குறித்த நயினாரின் பேச்சு ஆணவம் மிக்கது.
பாஜ கூட்டணியை அண்ணாமலை சரியாக கையாண்டார், நயினாருக்கு கையாளத் தெரியவில்லை என தெரிவித்தார். அதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டேன் எனவும் நயினார் நாகேந்திரன் குறித்து கடும் குற்றச்சாட்டுகளையும் டிடிவி.தினகரன் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இதற்கிடையில் டிடிவி தினகரனுடன் தொலைபேசி மூலமாக பேசி வருகிறேன். நட்பு ரீதியாக விரைவில் அவரை சந்திப்பேன் என அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை பாதுகாப்பு போலீசார் மற்றும் வாகனத்தை தவிர்த்து விட்டு, மாற்று காரில் அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் இரவு சென்று சந்தித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
டிடிவி தினகரனும், அண்ணாமலையும் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், இந்த ஆலோசனையின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு டிடிவி தினகரனிடம், அண்ணாமலை வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடந்த சில நாட்களுக்குமுன் அவரது வீட்டுக்கு நேரில் சென்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். தற்போது டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் மூலம் டிடிவி தினகரன் தனது முடிவை திரும்பப் பெறுவாரா அல்லது நிலையாக இருப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.