9 வருஷமா உதார் விடுகிறார், ஒப்பாரி வைக்கிறார்: டைட்டில மாத்துங்க... டயலாக்கை மாத்துங்க... படம் ஓடணுமா? வேண்டாமா? டிடிவிக்கு உதயகுமார் சூடு
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: தான் பிடித்த முயலுக்கு 3 கால் என்று தினமும் பேட்டி கொடுத்து வரும் பேட்டி நாயகன் டிடிவி.தினகரனுக்கு ‘என்ட் கார்டு’ இல்லையா என மக்கள் கேட்பது இவருக்கு தெரியுமா, தெரியாதா என்பது தெரியவில்லை. தொண்டர்களின் உழைப்பு, ஜெயலலிதாவின் செல்வாக்கால், அதிமுக தொண்டர்களின் உழைப்பு மற்றும் தியாகத்தால் தான் இவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை பெற்றதை மறந்துவிட்டு, அதிமுக தலைமையையும், தொண்டர்களையும் சிறுமைப்படுத்தி பேசுவதோடு, அழித்துவிடுவேன், ஒழித்து விடுவேன் என்று கடந்த 9 ஆண்டாக உதார் விட்டுதான் பார்க்கிறார். ஆனால், இதை நம்பத்தான் யாரும் தயாராக இல்லை. நீங்கள் என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழக அரசியலில் இனிமேல் இடம் இல்லை என்பது தான் மக்கள் கடந்த தேர்தலில், அவருக்கு அளித்த தீர்ப்பு.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி அதிமுகவை தலைமையேற்று ஜனநாயக கடமை ஆற்றி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒப்பாரி வைக்கிறார். இந்த ஒப்பாரியை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. தம்பியாக இருந்து சொல்கிறேன். இனிமேல் உங்களது டைட்டில மாத்துங்க, டயலாக்கை மாத்துங்க, உங்க 70 எம்எம் படம் தமிழ்நாட்டில எடுபடுதா, ஓடுதா என பார்ப்போம். அதைவிடுத்து தினந்தோறும் அரைத்தமாவையே அரைத்து கொண்டிருந்தால், பார்ப்பதற்கும், கேட்பதற்கும் யாரும் தயாராக இல்லை. அப்போதுதான் அவரது படம் ஓடும்.
அதிமுக கூட்டணி பற்றி டிடிவி.தினகரன் பேசி நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியமில்லை. சம்மன் இல்லாமல் அவர் ஆஜராகிறார். அரசியல் மரபு, இலக்கணம் இல்லாத தலைவர் டிடிவி.தினகரன். கொடநாடு வழக்கில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்னும் கொடநாடு வழக்கு எனச்சொல்லி எத்தனை நாள்தான் பூச்சாண்டி காட்டுவார். ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்த நீங்கள் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அரசியலில் வெற்றி பெறமுடியாது. எத்தனை பச்சைப்பொய், கட்டுக்கதை சொன்னாலும் யாரும் நம்புவதற்கோ பின்தொடரவோ, தயாராக இல்லை. 2026 தேர்தலோடு டிடிவி.தினகரன் அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும். கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என காத்திருக்கும் கொக்கு போல டிடிவி.தினகரன் காத்திருக்கிறார். கடலும் வற்றாது, கருவாடும் தின்ன முடியாது. அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் குறித்து நாம் பேசத் தேவையில்லை.
இவ்வாறு தெரிவித்தார்.
