நெல்லை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிட நான்தான் காரணம் என டிடிவி தினகரன் சொல்வது எனக்கு விளங்கவில்லை என்று நெல்லையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பாளையங்கோட்டை அன்புநகரில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக கட்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதுதொடர்பாக பல தலைவர்களிடம் பேசி உள்ளேன். அதிமுக ஒன்றிணைந்து வருகின்ற சட்டசபை தேர்தலில், எங்கள் கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். டெல்லி தலைமையோடு பேசி அனைவரையும் ஒன்றிணைக்க முடிவு எடுக்கப்படும். 2001ல் நடந்த சட்டசபை தேர்தலில் என் போன்றவர்கள் அரசியலில் முக்கிய இடம் பெற்றதற்கு டிடிவி தினகரனுக்கு முக்கிய பங்குண்டு.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக எங்களுடன் கூட்டணியில் இருந்தது. தொடர்ந்து அவர்கள் எங்களுடன் இருப்பார்கள் என கூறியிருக்கிறேன். பலமுறை தினகரனோடு தொலைபேசியிலும் பேசியிருக்கிறேன். அப்போது எல்லாம் கூட்டணி தொடர்பாக அவர் எந்தவித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. தற்போது திடீரென விலகுவதற்கு நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்கிறார். நயினார் நாகேந்திரன் அகங்காரத்தில் செயல்படுகிறார் என்று எதன் அடிப்படையில் கூறியிருக்கிறார் என தெரியவில்லை. நெல்லை பாஷையில் நான் சொல்வதென்றால் ‘எனக்கு விளங்கல’. பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* செங்கோட்டையனுக்கு பாஜவில் சேர அழைப்பா?
அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள செங்கோட்டையனிடம் பாஜ ஒன்றும் பேசவில்லை. ஒரு கட்சியுடன் கூட்டணியில் நாங்கள் இருக்கும்போது செங்கோட்டையனை நாங்கள் அழைப்பது நாகரிகமாக இருக்காது’ என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
* கன்னியாகுமரி கடலில் 3 மணி நேரம் தியானம்
பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் இரவு திடீரென கன்னியாகுமரி வந்தார். திரிவேணி சங்கமத்தில் நீராடிய அவர், கடலில் இடுப்பளவு தண்ணீரில் நின்றவாறு சுமார் 3 மணி நேரம் கண்களை மூடி தியானம் செய்தார். நேற்று முன்தினம் சந்திர கிரகணம் என்பதால், கிரகணம் தொடங்கிய சிறிது நேரத்தில், மந்திரங்களை கூறி தியானத்தை தொடங்கிய அவர், கிரகணம் முடியும் வரை கடலில் நின்று தியானத்தை முடித்தார். பின்னர் நேற்று அதிகாலை அவர் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் முடித்து விட்டு புறப்பட்டு சென்றார்.