Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கோட்டையனை பாஜ இயக்கவில்லை; டிடிவி குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்க முடியாது: நயினார் மறுப்பு

கோவை: செங்கோட்டையனை பாஜ இயக்கவில்லை எனவும், டிடிவி தினகரன் சொல்லும் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்க முடியாது என்றும் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜ தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன்பின், நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தே.ஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதற்கு நான் காரணம் என்று டிடிவி.தினகரன் எப்படி சொல்கின்றார் என தெரியவில்லை. நான் இன்னும் அவரது பேட்டியை பார்க்கவில்லை. பாஜ எப்போதும் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று தான் நினைக்கிறது. எனது தனிப்பட்ட எண்ணம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

ஒரு இடத்தில் கூட யாரையும் வேண்டாம் என்று சொன்னது இல்லை. பாராளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் டிடிவி இருந்தார். அதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலில் 165 இடங்களில் போட்டியிட்டு இரு சதவீதம் வாக்குகளை வாங்கினார். நாங்கள் அவர் சொல்வதைப்போல குறை சொல்லவில்லை. ஓபிஎஸ் சொல்லி இவர் பேசுகின்றாரா? என தெரியவில்லை. ஆனால், டிடிவி தினகரன் செல்லும் குற்றச்சாட்டுக்கு பொறுப்பு ஏற்க முடியாது. எனக்கு ஆணவம் இல்லை. செங்கோட்டையன் மீது அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அது அவர்களது உட்கட்சி பிரச்னை. அதைப்பற்றி கருத்துச்சொல்ல முடியாது. என்றுமே பாஜ அடுத்த கட்சி விவகாரங்களில் தலையிடாது. ஏப்ரல் 12ம் தேதி கூட்டணி குறித்து பேசும் போது, அமித்ஷா தெளிவாக சொல்லியிருக்கிறார். அது அவர்கள் கட்சி பிரச்னை என சொல்லியிருக்கிறார்.

கூட்டணியில் இருந்து யாரையும் நாங்கள் எப்படி வெளியேற்ற முடியும்? அவரது கட்சியை நாம் எப்படி வெளியே போக சொல்லலாம்? டிடிவி தினகரன் மீது மரியாதை வைத்திருக்கிறோம். கூட்டணியில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பது குறித்து, அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அவர் வந்தால் நல்லது, அவர் வரவேண்டும் என்று தான் நாங்கள் சொல்கிறோம். அவர்கள் இந்த கூட்டணிக்கு வர வேண்டும். நான் வரவேற்கிறேன். தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் இருக்கிறது. அதற்குள் கூட்டணிக்கு வருவார்கள். விமர்சனங்களை தாங்கினால்தான் வளர முடியும். பழுத்த மரம் தான் கல்லடி பட முடியும். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. தினகரன் எங்களுடன் சட்டமன்றத்தேர்தலில் கூட்டணியில் இல்லை, ஓபிஎஸ் பாராளுமன்றத்தேர்தலில் இல்லை. இதையெல்லாம் வைத்து ஒரு முடிவு செய்து விட முடியாது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜ, அதிமுக, பாரிவேந்தர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. கண்டிப்பாக அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்வோம். டிடிவி தினகரன் என்ன நிபந்தனை கொடுத்தார் என்பதை கேட்டு சொல்லுங்கள். பதில் சொல்கிறேன். மக்கள் ஓட்டு போடும் போது தேர்தல் அன்று ஒரு முடிவு செய்திருப்பார்கள். கூட்டணி கட்சிகளை பார்த்து ஓட்டு போட முடிவு செய்யமாட்டார்கள். தேர்தலில் முடிவுகள் ஜாதியை மையப்படுத்தி இருக்காது. அதிமுக பெரிய கட்சி, அகில இந்திய அளவில் பாஜ பெரிய கட்சி. மாநிலத்தில் முதல்வராக வரக்கூடியவர் தேசியகட்சியுடன் தொடர்பில் இருந்தால்தான் நன்மைகளை பெற முடியும். இப்போது, தமிழகம் நிறைய திட்டங்களை பெற முடியாமல் இருக்கிறது. வருங்காலத்தில் பிரதமர் மோடியை நம்பி தமிழக மக்கள் வாக்களிப்பார்கள்.

அதற்கு அனைவரும் ஒன்றாக வரவேண்டும். செங்கோட்டையனை பாஜ இயக்கவில்லை. பாஜ யார் பின்னாடியும் இல்லை, யாரையும் தவறாக இயக்கவில்லை. என்னை பொறுத்தவரை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். எனது மகன் நயினார் பாலாஜி, நான் மாநிலத்தலைவராக வருவதற்கு முன்பே பாஜவில் இருக்கிறார். இது வாரிசு அரசியல் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, மாநிலத்தலைவராக அண்ணாமலை செயல்பாட்டிற்கும், உங்கள் செயல்பாட்டிற்கும் வித்தியாசம் இருப்பதாக கட்சியினர் சொல்கின்றார்களே என்ற நிருபர்கள் கேள்விக்கு, ``ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை” என பதில் அளித்தார்.

ஓபிஎஸ், டிடிவியிடம் சமரசம் பேச தயார்

மதுரையில் நேற்றிரவு நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: ஒரு காலத்தில் அமித்ஷா யாரை முதல்வர் என்று சொல்கிறாரோ அவருக்கு வேலை செய்ய தயார் என்று டிடிவி.தினகரன் சொன்னார். சில அரசியல் மாற்றங்கள், மனவருத்தங்கள் ஏற்பட்டு இருக்கலாம். அதை எங்கள் தலைமையிடம் பேசி தீர்த்திருக்கலாம். சூழ்நிலை காரணமாக வெளியேறிவிட்டால் நான் பொறுப்பாக முடியாது. டிடிவி அவரை மட்டும் தான் பேச வேண்டும். அவர் வேறு கட்சி. ஓபிஎஸ் வேறு கட்சி. ஓபிஎஸ்சை காப்பாற்றுவதற்காக டிடிவி பேசுகிறார். அதிமுகவில் எல்லாரும் எனக்கு நண்பர்கள். அதனால் யார் வெளியேறியதற்கும் நான் காரணமில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வேண்டும். ஓபிஎஸ், டிடிவியிடம் சமரசம் பேச நான் தயார். இவ்வாறு அவர் கூறினார்.