Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூட்டணியை சரியாக கையாள தெரியாதவர்கள்; நயினார், எடப்பாடி மீது டிடிவி கடும் தாக்கு: ஓபிஎஸ் வெளியேற பாஜ தலைவரே காரணம் என குற்றச்சாட்டு

மதுரை: நயினாருக்கும், எடப்பாடிக்கும் கூட்டணியை கையாள தெரியவில்லை. ஓபிஎஸ் வெளியேறியதற்கு பாஜ தலைவரே காரணம் என்று டிடிவி.தினகரன் கடுமையாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார். மதுரையில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நிருபர்களிடம் கூறியதாவது: மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தோம். நாடாளுமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் வேறு. கூட்டணியில் இருந்து வெளியேற ரூம் போட்டெல்லாம் யோசிக்கவில்லை. தொண்டர்கள் தான் எனக்கு முக்கியம். நயினார் காரணம் இல்லை, கூட்டணி அமைத்தவர்கள் காரணமில்லை, அவர்கள் நாங்கள் தேவையில்லை என நினைத்திருக்கலாம். தொண்டர்களின் முடிவினால்தான் வெளியேறினோம். பாஜ கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு வெளியேறவில்லை. இது நிதானமாக எடுத்த முடிவு. தேவை இருந்தால் தான் டெல்லியில் உள்ள தலைவர்கள் யாரையும் சந்திப்பேன்.

விளம்பரத்திற்கு பூங்கொத்து கொடுக்க மாட்டேன். அது என் பழக்கம் இல்லை. எனக்கு அழுத்தம் தருவது தொண்டர்களும், மீடியாக்களும் தான். யாரை எதிர்த்து நான் கட்சி ஆரம்பித்தேன் என்பது உங்களுக்கு தெரியும்? அதற்கு எதிராக அவர்களோடு சேர்ந்துகொண்டு எம்பி, எம்எல்ஏ ஆகும் கூட்டமல்ல நாங்கள். அவர்களோடு சட்டமன்றத்துக்குச் செல்ல விருப்பமில்லை. அண்ணாமலை தேசிய ஜனநாயக கூட்டணியை நல்ல முறையில் கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை. பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்காத விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் பதில் ஆணவமிக்கது. பாஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதற்கு நயினாரின் செயல்பாடுகளே காரணம். அமமுக வேண்டுமா, வேண்டாமா என்பதை அதிமுக, பாஜவும் முடிவு செய்யட்டும். எடப்பாடி பழனிசாமி மாறுவார் அல்லது திருத்தப்படுவார் என 4 மாதங்கள் காத்திருந்தோம்.

ஆனால் அவர் மாறுவதாக தெரியவில்லை. அண்ணாமலைதான் எங்களை கூட்டணிக்கு கொண்டுவந்தார். அவர் நீக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அமித்ஷா எங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் முயற்சி தோல்வி அடைந்ததற்கு காரணம் நாங்கள் அல்ல. ஓபிஎஸ் விலகிய முடிவுக்கு நயினாரின் செயல்பாடு காரணமாக இருக்கலாம். ஓபிஎஸ் விவகாரத்தில், நயினார் பேசியது அப்பட்டமான பொய். அவருக்கு நடந்தது எனக்கும் நடக்கும். நாங்கள் சிறியவர்கள், பெரியவர்கள் வந்து விட்டார்கள் என இருக்கின்றனர். அண்ணாமலை என்னிடம் கூட்டணியில் இருந்து வெளியேறியதை மறுபரிசீலனை செய்ய வேண்டினார். அமமுக கட்சி தொடங்கியதற்கு எதிரான நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க முடியாது. எங்களை தவிர்த்து அவர்கள், பெரிய கட்சியை நல்லதாக நினைக்கலாம். இந்த நேரத்தில் விழித்துக் கொள்ள வேண்டியது அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் தான்.

அதிமுக விவகாரத்தில் டெல்லி சொல்லி சரியாகும் என நினைத்தால் அவர்கள் ஏமாந்துபோவோர்கள். நாங்கள் மீண்டும் வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? நாங்கள் ஒன்றுபட வேண்டும். எங்களை டெல்லியில் வைத்து சமாதானம் பேசலாம் என கனவு காண வேண்டாம். இப்போது தே.ஜ. கூட்டணியில் இருந்தால் அது பொருந்தா கூட்டணியாக அமைந்து விடும். கூட்டணி ஆட்சி எனவும், முதலமைச்சர் அதிமுகவை சேர்ந்தவர் எனவும் அமித்ஷா தெரிவித்தார். சிலர் ஆங்காங்கே பேசும்போது பேயாட்டம் ஆடுகிறார்கள். திருந்தவே திருந்தாத நிலையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைவது அதிமுகவுக்கு நல்லது. ஆட்சி அமைக்கும் கூட்டணியில் நாங்கள் இருப்போம். நண்பர்கள் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும்.

எப்போது சேர்வோமோ? அப்போது சேர்வோம். ஸ்லீப்பர் செல்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறுவார்கள். அண்ணன், தம்பிகள் தான் உடன் வருவார்கள். அமமுகவிற்கான இடர்பாடுகளை களையும்பட்சத்தில்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணையும். இவ்வாறு தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி மாறுவார் அல்லது திருத்தப்படுவார் என 4 மாதங்கள் காத்திருந்தோம். ஆனால் அவர் மாறுவதாக தெரியவில்லை. அண்ணாமலைதான் எங்களை கூட்டணிக்கு கொண்டுவந்தார். அவர் நீக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அமித்ஷா எங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் முயற்சி தோல்வி அடைந்ததற்கு காரணம் நாங்கள் அல்ல.

‘செங்கோட்டையனுக்கு உதவியாக இருப்போம்’

டிடிவி.தினகரன் கூறுகையில், ‘அதிமுக ஒன்றிணைய செங்கோட்டையன் எடுத்து வரும் முயற்சியை வாழ்த்துகிறேன். செங்கோட்டையனின் முயற்சிக்கு தேவைப்பட்டால் அவருக்கு உதவியாக ஜெயலலிதாவின் தொண்டர்கள் நாங்கள் இருப்போம். ‘கெடுவான் கேடு நினைப்பான், வீண் ஆசையே விபரீத புத்தி’ என்பார்களே, அதேபோல் ஒரு டிரையல் நடத்தியுள்ளனர். இது செங்கோட்டையனுக்கு பின்னடைவு அல்ல. அவரை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடிக்குத்தான் பின்னடைவு. ஜெயலலிதா தொண்டர்கள் கையில் தான் முடிவு இருக்கிறது.

இப்போதும் அமைதி காப்பது நல்லதல்ல. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய இயலும். தற்கொலை செய்து விட்டா கொள்கையில் இருக்க முடியும்? திமுகவுடன், சீமானுடன் கூட்டணி இல்லை. அரசியலில் எதுவும் நடக்கும், புதிய கூட்டணி அமையும். விஜயுடன் சேர்ந்து போனால் என்ன? அவர் தலைமை தாங்கலாம் என நினைக்கக் கூடாதா? விஜய்யை குறைத்து பேசக்கூடாது. அரசியலில் எம்ஜிஆரை விட சீனியர்கள் அவருடன் இணைந்தார்கள். விஜயை எதற்கும் குறைத்து பேச வேண்டாம்’ என்றார்.