சென்னை : துரோகம் தலைவிரித்து ஆடுகிறது.. எடப்பாடி பழனிசாமியை அமமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி அமைந்த பின் தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் நேரம் கேட்டிருந்தனர். ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை. எடப்பாடிக்கு மட்டும் பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் கடும் விரக்தியடைந்த ஓபிஎஸ், தனக்கு சுயமரியாதை முக்கியம் என்று கூறி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதே போல், ஓபிஎஸ்சை தொடர்ந்து பாஜ கூட்டணியில் இருந்து அமமுக விலகுவதாக டிடிவி தினகரனும் அறிவித்தள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்," எடப்பாடி பழனிசாமி திருந்துவார் என நம்பினோம். ஆனால் அது நடப்பதாகத் தெரியவில்லை.துரோகம் தலைவிரித்து ஆடுகிறது. தான் துரோகம் செய்தது சரி என்பது போல ஊர் முழுக்கச் சென்று ஆணவத்துடன் பேசி வருகிறார்.அம்மாவின் தொண்டர்கள் இணைந்து ‘சரியான முதலமைச்சர் வேட்பாளரை' தருவார்கள் என இத்தனை காலம் பொறுமையாக இருந்தோம்.அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிந்துவிட்டது. அதனால்தான் நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். அமமுக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். "இவ்வாறு தெரிவித்தார்.