திண்டுக்கல்லில் கடந்த செப். 7ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு வந்த போது, அவரது வாகனத்தை மறைத்து 10.5 இடஒதுக்கீடுக்கு எதிராக அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, சின்னாளபட்டி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சிக்கு வந்த பின் சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்பட்டால், தென்மாவட்டத்தில் கலவரம் ஏற்படும் என கருத்து தெரிவித்தார். இதனை கண்டித்து நேற்று திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயலாளர் ஜெயராம் தலைமையில் அக்கட்சியினர் டிடிவி தினகரனின் உருவப்படத்தை தீயிட்டு எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.