சென்னை: என்டிஏ கூட்டணியில் சேரும்படி டிடிவி.தினகரனை விரைவில் சந்தித்து அழைக்க உள்ளதாக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி பாஜவைச் சேர்ந்த அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாதவரம் அருகே மாத்தூரில் நடந்தது. அறக்கட்டளை நிர்வாகி எம்.ஏ.குமரன் தலைமை வகித்தார். விழாவில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு 25 மாணவர்களுக்கு கல்வி நிதி, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை காப்பாற்றியது பாஜ தான் என அவர் கூறியிருப்பது உண்மைதான். தமிழகத்தின் நலனில் பாஜ அக்கறையுடன் செயல்பட்டுள்ளது என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது என தேசிய ஜனநாயக் கூட்டணி தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதை ஏற்று தமிழக பாஜ தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அமமுக தலைவர் டிடிவி.தினகரனை விரைவில் சந்திக்க உள்ளேன். அப்போது தமிழகத்தின் நலன் கருதி அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது குறித்து நண்பர் என்ற முறையில் விவாதிக்க உள்ளேன். தூத்துக்குடியில் விஜய்யின் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டபோது திருச்சி நிகழ்ச்சியில் பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து போலீசார் தெரிவித்துள்ளனர். விஜய்க்கு கூட்டம் வருவதை வரவேற்கும் அதே நேரத்தில் பொதுச் சொத்துகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தீங்கு விளைவிக்காமல் கூட்டங்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.