டிரம்ப் பேச்சை திரித்து வெளியிட்ட விவகாரம் ‘பிபிசி’ தலைமை அதிகாரிகள் ராஜினாமா: சதியை வெளியிட்ட பத்திரிகைக்கு பாராட்டு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சை திரித்து வெளியிட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, பிபிசி நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் பதவி விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் அருகே டிரம்ப் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார். அப்போது, ‘அமைதியாகவும், தேசப்பற்றுடனும்’ பேரணியாக சென்று செனட்டர்கள் மற்றும் பெண் உறுப்பினர்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால், இந்த உரையை மையமாக வைத்து பிபிசி வெளியிட்ட ‘பனோரமா’ என்ற ஆவணப்படத்தில், உரையின் வேறு ஒரு பகுதியில், அதாவது 50 நிமிடங்களுக்குப் பிறகு தேர்தல் நடைமுறைகள் குறித்து டிரம்ப் பேசிய ‘பயங்கரமாகப் போராடுங்கள்’ என்ற வாக்கியத்தை, நாடாளுமன்ற பேரணி தொடர்பான பேச்சுடன் தவறாக இணைத்து சித்தரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சதியை ‘தி டெலிகிராப்’ பத்திரிகை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து பிபிசி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டிம் டேவி மற்றும் செய்தி நிறுவன தலைமை செயல் அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘பிபிசி தலைமை அதிகாரிகள் நேர்மையற்றவர்கள்; எனது பேச்சை திரித்து வெளியிட்ட விஷயத்தில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். அதிபர் தேர்தலில் தங்களது செல்வாக்கை செலுத்த முயன்றனர். இந்த மோசடி பத்திரிகையாளர்களை அம்பலப்படுத்திய தி டெலிகிராப் பத்திரிக்கைக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

