Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிரம்பின் நம்பிக்கைக்குரிய நபர் இந்தியாவுக்கான அமெரிக்க புதிய தூதராக நியமனம்: 50% வரிவிதிப்புக்கு மத்தியில் திருப்பம்

வாஷிங்டன்: அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நம்பிக்கைக்குரியவரும், வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரியுமான செர்ஜியோ கோரை இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக நியமித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளராக அறியப்படும் செர்ஜியோ கோர், வெள்ளை மாளிகையில் அதிபரின் முக்கியப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், அதிபரின் ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கைக்கு ஆதரவாக நாடு முழுவதும் சுமார் 4,000 அதிகாரிகளை நியமித்து சாதனை படைத்தவர் என்று பாராட்டப்பட்டவர். மேலும், டிரம்பின் அதிபர் தேர்தல் பிரசாரங்களில் முக்கியப் பங்காற்றியது, அவருடைய புத்தகங்களை வெளியிட்டது, அவருக்கு ஆதரவான மிகப்பெரிய சூப்பர் பிஏசி-யை நடத்தியது போன்ற செயல்களில் ஈடுபட்டதன் மூலம், டிரம்பின் முழு நம்பிக்கையைப் பெற்றவராக செர்ஜியோ கோர் திகழ்கிறார்.

உக்ரைன் போர் சூழலில் ரஷ்யாவுடன் இந்தியா கொண்டுள்ள தொடர்ச்சியான பொருளாதார உறவுகள், குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, வரும் 27ம் தேதி முதல் இந்திய இறக்குமதிகள் மீது 50% வரியை விதிக்க டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது. இதில் 25% வரி, ரஷ்யா உடனான எண்ணெய் வர்த்தகத்திற்காக விதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில், அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்கத் தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் செர்ஜியோ கோரை நியமிப்பதாக அறிவித்தார்.

செர்ஜியோ கோரின் விசுவாசம் மற்றும் செயல்திறனைப் பாராட்டிய டிரம்ப், ‘உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட பிராந்தியத்தில், எனது செயல்திட்டத்தை நிறைவேற்றவும், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றவும் எனது நம்பிக்கைக்குரிய ஒருவர் இருப்பது முக்கியம்’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். செர்ஜியோ கோர், செனட் சபையால் உறுதி செய்யப்படும் வரை தனது தற்போதைய வெள்ளை மாளிகைப் பணிகளைத் தொடர்வார். இந்த நியமனம், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் வேகமாக மாறிவரும் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் மீது டிரம்ப் நிர்வாகம் தனது கட்டுப்பாட்டை இறுக்க விரும்புவதைக் காட்டுகிறது.