டிரம்ப் அரசின் விசா கொள்கைகளால் இந்திய மாணவியின் ‘அமெரிக்க கனவு’ பொய்த்தது:கண்ணீருடன் வெளியேறிய பின் உருக்கமான வேண்டுகோள்
வாஷிங்டன்: அமெரிக்கக் கனவு தகர்ந்ததால் கண்ணீருடன் நாடு திரும்பிய இந்திய மாணவி, அமெரிக்காவை மட்டும் நம்பாமல் பிற நாடுகளிலும் வாய்ப்புகளைத் தேடுமாறு சக மாணவர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இந்திய மாணவி அனன்யா ஜோஷி, கடந்த செப்டம்பர் 29ம் தேதி, ‘அமெரிக்கா, ஐ லவ் யூ’ என்ற தலைப்பில் கண்ணீருடன் வெளியிட்ட பதிவு இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில், நிலையான வேலை கிடைக்காததால் தனது அமெரிக்கக் கனவு முடிவுக்கு வந்ததாக உருக்கமாகத் தெரிவித்திருந்தார். பிரபல நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அவர், திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
மேலும், அவரது நிறுவனம் உறுதியளித்தபடி மின்னணு முறையில் அங்கீகரிக்கப்படாததால், அவரால் ‘ஸ்டெம் ஆப்ட்’ விசா நீட்டிப்பிற்கு விண்ணப்பிக்க முடியவில்லை. தொடர்ந்து 20 முதல் 30 நேர்காணல்களில் கலந்துகொண்டபோதும், எஃப்-1 விசா வைத்திருப்பவருக்குப் பணி வழங்க நிறுவனங்கள் தயங்கியதால், நிரந்தரக் குடியுரிமை அல்லது கிரீன் கார்டு இல்லாதது பெரும் தடையாக அமைந்தது. இந்நிலையில், தனது வைரல் பதிவுக்குப் பிறகு பேட்டி ஒன்றில் பேசியுள்ள அனன்யா ஜோஷி, இந்திய மாணவர்கள் அமெரிக்காவை மட்டுமே நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறும்போது, ‘உலகம் உண்மையில் மிகப்பெரியது; ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதுபற்றி நமக்குச் சொல்லப்படவில்லை. குறிப்பாக, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நிபுணர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது’ என்றார்.
கடந்த 2024-25ம் ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 13% குறைந்துள்ளதாகவும், ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளைத் தேர்ந்தெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கடந்த செப்டம்பர் மாத அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின் விசா கொள்கைகள், வேலை சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகரிக்கும் செலவுகள் ஆகியவையே இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.