Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இந்தியா-பாக். போரை நிறுத்தியதாக 30வது முறையாக பேச்சு; நோபல் பரிசுக்கு அடிபோடும் டிரம்ப் கனவு பலிக்குமா?.. வெள்ளை மாளிகையும் வலியுறுத்தி வருவதால் சர்ச்சை

புதுடெல்லி: உலகப் போர்களைத் தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து உரிமை கோரி வருவதால், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கலாமா? என்பது குறித்த சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக அளவில் பல்வேறு மோதல்களைத் தீர்த்து வைத்ததாகத் தொடர்ந்து கூறி வருகிறார். இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம், ருவாண்டா-காங்கோ இடையேயான 31 ஆண்டு காலப் போர், தாய்லாந்து - கம்போடியா மோதல் என மாதத்திற்கு ஒரு போர் வீதம் முடிவுக்குக் கொண்டு வந்ததாக அவர் உரிமை கோருகிறார். தனது சமூக வலைதளப் பக்கத்தில், இந்தியா-பாகிஸ்தான் அணு ஆயுதப் பிரச்னையைக்கூட வர்த்தகப் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரும் இதையே வழிமொழிந்து, செர்பியா-கொசோவோ, எகிப்து-எத்தியோப்பியா மோதல்களையும் டிரம்ப் தீர்த்ததாகவும், இதனால் அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல் பாகிஸ்தானும், டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க தாங்கள் பரிந்துரைப்பதாக கூறியுள்ளது. டிரம்பின் இந்தக் கூற்றுகளால், அவரது நோபல் பரிசு தகுதி குறித்து கடுமையான விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, வர்த்தகக் கொள்கைகளைப் பயன்படுத்தி அமைதியை நிலைநாட்டியதாக அவர் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பொருட்கள் மீது 25% வரியும், பாகிஸ்தான் பொருட்கள் மீது 19% வரியும் விதித்ததன் மூலம் இரு நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்ததாக அவர் கூறுகிறார். ஆனால், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட போர்நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு எதுவும் இல்லை எனப் பிரதமர் மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதனால், டிரம்பின் கூற்றுகளில் உள்ள நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் தனது செல்வாக்கை வலுப்படுத்தவும், தன்னை உலக சமாதானத் தூதராகக் காட்டிக்கொள்ளவுமே டிரம்ப் இதுபோன்ற மிகைப்படுத்தப்பட்ட கருத்துகளை தொடர்ந்து கூறி வருவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். கடந்த மே 10ம் தேதிக்குப் பிறகு சுமார் 30 முறை இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தைக் குறிப்பிட்டுப் பேசியிருப்பது, திட்டமிட்ட சுய விளம்பரத்திற்கான முயற்சி என்பதையே காட்டுகிறது. ஏப்ரல் 22 முதல் ஜூன் 16 வரை மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசவே இல்லை என்ற ஒன்றிய அரசு மறுத்து வரும் நிலையில், டிரம்ப் கூறி வரும் கருத்துகள் வாதங்களை பலவீனப்படுத்துகிறது. இதனால், அவரது ஆதரவாளர்கள் இதை புதிய வகை ராஜதந்திரம் எனப் பாராட்டினாலும், பலரும் டிரம்ப் கூறும் கருத்துகளின் உண்மைத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்குமா? அதற்கான உண்மையான தகுதி அவரிடம் உள்ளதா? என்பது போன்ற பலகேள்விகள் எழுந்துள்ளன.

சீனாவுக்கு இணையாக இந்தியா

ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ளுமாறு இந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு இந்தியா நிதியுதவி செய்வதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பணியாளர் துணைத் தலைவரும், டிரம்பின் செல்வாக்கு மிக்க உதவியாளர்களில் ஒருவருமான ஸ்டீபன் மில்லர் கூறுகையில், ‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் உடனான போருக்கு இந்தியா தொடர்ந்து நிதியளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ரஷ்ய எண்ணெயை வாங்குவதில் சீனாவுக்கு இணையாக இந்தியா உள்ளது. இதுதான் வியக்க வைக்கும் உண்மையாக உள்ளது’ என்று தெரிவித்தார். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகளில் ஒன்றான இந்தியா மீது டிரம்ப் நிர்வாகம் முன்வைத்துள்ள இந்த விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் மிரட்டல்களுக்குப் பணியாமல் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

சர்ச்சை நடிகையை பாராட்டிய டிரம்ப்

பிரபல அமெரிக்க ஆடை நிறுவனமான ‘அமெரிக்கன் ஈகிள்’ என்ற நிறுவனம் தனது ‘ஜீன்ஸ்’ விளம்பரத்திற்காக நடிகை சிட்னி ஸ்வீனியை ஒப்பந்தம் செய்தது. அந்த விளம்பரத்தில், சிட்னி ஸ்வீனி, ஜீன்ஸ் பேன்ட் அணிந்தபடி தோன்றி, மரபணுக்களையும், ஜீன்ஸையும் இணைத்து சிலேடையாக பேசும் வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இவரது பேச்சு வெள்ளை இன ஆதிக்கத்தை நுட்பமாக ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், நடிகை சிட்னி ஸ்வீனி, குடியரசுக் கட்சியில் வாக்காளராகப் பதிவு செய்துள்ள தகவல் வெளியானது. இதுகுறித்து அதிபர் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ஓ, அப்படியா! எனக்கு அந்த விளம்பரம் மிகவும் பிடித்திருக்கிறது. சிட்னி ஸ்வீனி குடியரசுக் கட்சிக்காரர் என்றால், அவருடைய விளம்பரம் அருமையானது. இந்த விஷயம் எனக்குத் தெரியாது; நீங்கள் சொன்னது எனக்கு மகிழ்ச்சி’ என்று பதிலளித்தார்.