Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிரம்ப் 50% வரி விதிப்பு: அமெரிக்காவுக்கு ஏற்றுமதி நிறுத்தம்: கோவை தொழில்துறைக்கு ரூ.4,000 கோடி பாதிப்பு

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.  இந்தநிலையில் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதற்காக இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீதம் அபராத வரியை டிரம்ப் விதித்துள்ளார். இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த புதிய கூடுதல் இறக்குமதி வரி ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி எக்கு மற்றும் அலுமினியத்திற்கு 50 சதவீத வரியும், செம்புவிற்கு 50 சதவீத வரியும், வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவீதம் என துறை வாரியாக கூடுதல் வரிகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் மருந்துகள், கச்சா எண்ணெய், சுத்திரிகரிக்கப்பட்ட எரிபொருட்கள், இயற்கை எரிவாயு, கணினி, மின்னணு பொருட்கள் மற்றும் செமிகண்டக்டர்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

50 சதவீத வரி விதிப்பினால் ஜவுளி, ஆடைகள், தோல் பொருட்கள், காலணி, ரசாயனம், ஆபரணங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட துறைகள் கடும் பாதிப்பை சந்திக்க உள்ளன. இந்த வரி விதிப்பு கோவை தொழில் துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அசோசியேசன் அமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது: அமெரிக்கா விதித்துள்ள இந்த வரி விதிப்பு நியாயமானதாக இல்லை. அபராத வரி விதிப்பு அமலுக்கு வர இன்னும் 18 நாட்களே அவகாசம் உள்ளது.

இந்த வரி விதிப்பு தொழில்துறைக்கு, குறிப்பாக ஜவுளித்துறைக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். போட்டி நாடுகளை விட 30 சதவீத வரி உயர்வு என்பது ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை. ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 33 சதவீதம் வரை ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி இருக்கிறது. ஹோம் டெக்ஸ்டைலில் 48 முதல் 50 சதவீதம் வரை இருக்கிறது. இந்த வரி விதிப்பு இந்த துறையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இது ஏற்றுமதிக்கு மட்டும் பாதிப்பு என இல்லாமல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போது இந்த வரி விதிப்பு காரணமாக மூன்று விதமான சூழல்கள் இருக்கிறது. முதலாவதாக, இந்த வரிவிதிப்பை அமலுக்கு கொண்டு வர இருக்கும் 27ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. இதில் ஒரு சுமுக  உடன்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இரண்டாவதாக, ரஷ்யாவை வழிக்கு கொண்டு வரும் முயற்சியாக இதை அமெரிக்கா செய்து இருக்கிறது. இந்த சூழலில் ரஷ்யா - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் நடப்பதால், இதில் ஏதேனும் உடன்பாடு ஏற்பட்டால் சாதகமான நிலை உருவாகும்.

மூன்றாவதாக, தீர்வு இல்லை எனில் ஜவுளித்துறையில் கடுமையான பாதிப்புகள் இருக்கும். இந்த சூழலை ஒன்றிய அரசு போர்க்கால அடிப்படையில் கையாள வேண்டும். வங்கிகளின் மூலமாக தொழில் துறைக்கு ஆதரவு, தொழிலில் நெருக்கடி ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் என உதவ வேண்டும். ஜவுளி துறையில் உள்ள அனைத்து பகுதிகளுமே இந்த வரிவிதிப்பால் பாதிக்கப்படும் என்பதால், அனைத்தையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஏற்றுமதிக்கான மானியங்களை வழங்குவதற்கான திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும். இப்போதே குழப்பமான சூழல் உருவாகி இருக்கிறது. வெளிநாட்டு வாங்குவோர்கள் (பையர்கள்) உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை எடுத்துக் கொள்வார்களா? அல்லது நிறுத்த வேண்டுமா? என்பது  உள்ளிட்ட எந்த தெளிவும் இல்லாமல் ஒரு குழப்பமான சூழல் நிலவுகிறது. இனிமேல் தான் வெளிநாட்டைச் சேர்ந்த பையர்களிடம் பேச வேண்டும், அப்பொழுதுதான் ஒரு தெளிவு கிடைக்கும். ஏற்கனவே கொடுத்த ஆர்டர்களை எடுத்துக் கொள்வார்களா? இல்லையா? என்பது இனிமேல் தான் தெரியும்.

இந்த வரி என்பது சாதாரணமானது கிடையாது. இதை யாராலும் சமாளிக்க முடியாது, இந்த வரி விதிப்பை பையர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறார்கள் என தெரியவில்லை. ஒட்டுமொத்த ஜவுளித்துறைக்கும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதை அரசும், தொழில் துறையும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும். இந்த வரி விதிப்பு அமெரிக்க மக்களை கடுமையாக பாதிக்கும், கையிருப்பு எல்லாம் தீர்ந்து புதிய பொருட்களுக்கு வரி வரும் போது, அமெரிக்க மக்களின் எதிர்ப்பு எப்படி இருக்கும் என்பது தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருளாதார நிபுணர் ஆடிட்டர் கார்த்திகேயன் கூறியதாவது: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரியினை 50 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இதனால் டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், கெமிக்கல், ஜூவல்லரி போன்ற பல துறைகளில் பாதிப்பு இருக்கும். இந்த நடவடிக்கை காரணமாக அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாகும். பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

ஏற்கனவே எடுத்த ஆர்டர்களை என்ன செய்வது? அனுப்பலாமா? வேண்டாமா என குழப்பங்கள் இருப்பதால் ஏற்றுமதி செய்வதை சிலர் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றனர். ஏற்றுமதியாளர்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழல் இருக்கிறது. பொருட்கள் பாதி தயாரிக்கப்பட்டுள்ளது, அதை தொடரலாமா? ஏற்கனவே அனுப்பிய பொருட்களுக்கு  பணம் வருமா? வராதா? வாடிக்கையாளர்கள் வாங்குவார்களா? மாட்டார்களா? என்ற குழப்பம் இருக்கிறது. இது ஏற்றுமதியாளர்களுக்கு சவாலான காலகட்டமாக மாறி இருக்கிறது.

இந்த நடவடிக்கையால் இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு இருக்கும் என சொல்ல முடியாது. ஏற்றுமதியில் சுணக்கம் இருக்கும், ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு இருக்கும். இந்த வரி விதிப்பை எவ்வளவு நாள் அமெரிக்கா வைத்திருக்கும் என சொல்ல முடியாது. இந்த வரி விதிப்பால் அமெரிக்காவிற்கு பாதகம் அதிகமாக இருக்கும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொருளாதார போர் என்று சொல்லாம்.

அனைத்து நாடுகளுமே இந்த நடவடிக்கையால்  ஸ்தம்பித்து போய் இருக்கிறது. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் இருப்பவர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஏற்றுமதியாளர்களுக்கு இந்த நேரத்தில் அரசின்  சார்பில் இருந்து உதவிகள் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வங்குவதால் அமெரிக்கா 50 சதவீதம் இந்திய பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்துள்ளது.

அதேசமயம் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீது இத்தகைய வரி விதிக்கப்படவில்லை. இந்த வரி விதிப்பு அமலுக்கு வர இன்னும் 18 நாட்கள் உள்ளன. இந்தியா நட்பு நாடு என்பதால், அமெரிக்கா இந்த வரி விதிப்பை மறு பரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லையெனில் கோவையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பவுண்டரி, ஆட்டோமொபைல், இயந்திர உதிரி பாகங்கள், தங்கம், வைர ஆபரணங்கள், ஜவுளி, வெட்கிரைண்டர், மோட்டார் உள்ளிட்டவற்றில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி அளவிலான ஏற்றுமதி பாதிக்கப்படும்.

அமெரிக்க சந்தையில் இந்திய சரக்குகளின் விலை அதிகரிக்கும். அமெரிக்க வியாபாரிகள் இந்திய பொருட்கள் இறக்குமதியை நிறுத்தி வைப்பார்கள் அல்லது வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முயற்சிப்பார்கள். இதனால் ஏற்றுமதியை நம்பியிருக்கும் துறைகளுக்கு தொழில் குறையும். இதனால் அந்த துறைகளை சார்ந்து இயங்கும் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* அமெரிக்காவில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்

50 சதவீத வரி விதிப்பால் அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்கள் விலை அதிகரிக்கும். அமெரிக்க வியாபாரிகள் இந்திய பொருட்கள் இறக்குமதியை நிறுத்தி வைப்பார்கள்  அல்லது வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முயற்சிப்பார்கள். அதுவரை ஏற்கனவே சென்று கொண்டிருந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவும், இந்த நடவடிக்கை காரணமாக அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாகவும் வாய்ப்புள்ளது.

* இந்த வரி விதிப்பு அமெரிக்க மக்களை கடுமையாக பாதிக்கும், கையிருப்பு எல்லாம் தீர்ந்து புதிய பொருட்களுக்கு வரி வரும் போது, அமெரிக்க மக்களின் எதிர்ப்பு எப்படி இருக்கும் என்பது தெரிய வரும்.

* இந்த வரி விதிப்பை எவ்வளவு நாள் அமெரிக்கா வைத்திருக்கும் என சொல்ல முடியாது. இந்த வரி விதிப்பால் அமெரிக்காவிற்கு பாதகம் அதிகமாக இருக்கும்.

* அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொருளாதார போர் என்று சொல்லாம். அனைத்து நாடுகளுமே இந்த நடவடிக்கையால் ஸ்தம்பித்து போய் இருக்கிறது.

* மஞ்சள் வர்த்தகத்தில் ரூ.100 கோடி இழப்பு

ஈரோடு  மாவட்டம் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை  செய்யப்படும் மஞ்சள்,  ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் வேளாண்மை  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஏலம் மூலம் விற்பனை  செய்யப்படுகிறது. உள்நாட்டு தேவை போக பங்களாதேஷ், அமெரிக்கா, வளைகுடா  நாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதியாகிறது. அந்த மஞ்சள், மஞ்சள் தூளாகவும்,  குர்குமின், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாகவும் ஏற்றுமதியாகிறது.

தற்போது,  இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு  50 சதவீத வரி விதிப்பால், மஞ்சள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: ஈரோடு  உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் மஞ்சள்களில், 80 சதவீதம்  உள்நாட்டு தேவைக்காகவே பயன்படுத்தப்படுகிறது.

20 சதவீதம்தான்  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. மொத்த ஏற்றுமதியில் 10 சதவீதத்துக்குள்  அமெரிக்காவுக்கு செல்கிறது. அதிலும், ஈரோடு மற்றும் சுற்றுப்பகுதியில்  இருந்து குறைந்த அளவே நேரடியாக மஞ்சள் தூள், குர்குமினாக ஏற்றுமதி  செய்கின்றனர். மேலும் நிஜாமாபாத், மும்பை போன்ற பகுதி வியாபாரிகளுக்கு  கொள்முதல் செய்து, அவர்கள் தேவை அடிப்படையில் ஏற்றுமதி செய்கின்றனர்.

சராசரியாக நமக்கு ஆண்டுக்கு 7,000 டன் அளவுக்கு 100 கோடி ரூபாய்க்கு  மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில், ஈரோடு மாவட்டத்தில் இருந்து 1,750  டன் அளவுக்கு அதாவது 25 கோடி ரூபாய்க்கு மஞ்சள் ஏற்றுமதி  செய்யப்படுகிறது. இது அமெரிக்கா வரி விதிப்பால் பாதிக்கும். இது  தற்காலிகமான பாதிப்பு என எண்ணுகிறோம். விரைவில் சீராகும் என நம்புகிறோம்.  அதேநேரம், ஈரோடு தவிர நிஜாமாபாத், மும்பை போன்ற பகுதிகளில் இருந்தும்  பங்களாதேஷ் உட்பட சில நாடுகளுக்கு அதிகமாக மஞ்சளை அனுப்புகிறோம். இவ்வாறு  அவர் கூறினார்.

* 10,000 கோடி ரூபாய் தோல் வர்த்தகம் முடங்கும்: 4 மாவட்டங்களில் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம்

உலகின் தலைசிறந்த தோல் பொருட்கள் தயாரிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் தோல் பொருட்களான ஷூ, தோல், கையுறைகள், தோல் பைகள் உள்ளிட்டவை தங்களுக்கென உலக அரங்கில் தனிச்சிறப்பை கொண்டவையாக திகழ்கின்றன.

இதில் குறிப்பாக ஒருங்கிணைந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல்விஷாரம் உள்ளிட்ட பகுதிகள் தோல் பதனிடுதல் மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பின் மையமாக திகழ்கின்றன. அதேபோல் ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களிலும் தோல்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. உலகின் முன்னணி தோல் விற்பனை  பிராண்டுகள் இந்த பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் ஷூ தயாரிப்பு  நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பை மேற்கொண்டுள்ளன.

உலகின் சுமார் 20 சதவீத கால்நடைகளின்  தோல் இந்தியாவில் பொருட்களாக மாற்றம் பெற்று அமெரிக்கா, இத்தாலி,  இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  சுமார் 40 சதவீத பெண்கள் உள்ளிட்ட 40 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள்  இந்த தோல் மற்றும் தோல் தயாரிப்புகள் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிலில் கடந்த நிதியாண்டில் ரூ.42,000 கோடி இந்தியாவின் பொருளாதாரத்திற்கு அந்நிய செலாவணியை ஈட்டி தந்து உள்ளன.

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தொழில்களில் தோல், ஷூ மற்றும் இதர தோல் பொருட்களும் அடங்கும். இதனால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அளவிலான தோல் வர்த்தகம் முடங்கும் நிலை உருவாகி உள்ளது. உலகின் சிறந்த பிராண்டுகளை கொண்டுள்ள அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க தற்போது ஆர்வம் காட்டவில்லை.

இதனால் ஏறத்தாழ ரூ.43 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி கையைவிட்டு போகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் 300க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஷூ தயாரிப்பு நிறுவனங்கள் தொழில் முடங்கும் நிலை உருவாகி உள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல்  மாவட்டங்களில்  உள்ள தோல் தயாரிப்பு தொழிற்சாலைகள் வாயிலாக ஆண்டுக்கு ரூ.14,000  கோடி அளவில் ஏற்றுமதி நடந்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்க வரிவிதிப்பால் சுமார் 25 சதவீதம் வரை தோல் தயாரிப்பு குறையக் கூடும். சுமார் ரூ.100 கோடி ஏற்றுமதி பாதிக்கும். லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்கள் என தொழிற்துறை வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

* இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் அமெரிக்கா முதலிடம்

* உலகின் 13 சதவீத அளவிலான தோல் மற்றும் தோல் பொருட்களை தயாரிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது.

* சீனாவிற்கு அடுத்த நிலையில் ஷூ தயாரிப்பு நாடாக இந்தியா விளங்குகிறது.

* இந்தியாவில் இருந்து சுமார் 2.6 பில்லியன் ஜோடி ஷூக்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

* ஏற்றுமதியில் தோலுக்கு நிகராக ஷூக்களும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

* இந்தியாவின் தோல் உற்பத்தி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடித்துள்ள நாடு அமெரிக்கா.

* கடந்த நிதியாண்டில் இந்தியாவில் இருந்து சுமார் ஆயிரம் கோடிக்கு தோல், ஷூ, தோல் பைகள், கையுறைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

* இது நாட்டின் தோல் ஏற்றுமதியில் 21.65 சதவீதமாக உள்ளது. ஏற்றுமதி மதிப்பு சுமார் ரூ.6,700 கோடியாக உள்ளது.

* சுமார் 40 சதவீத பெண்கள் உள்ளிட்ட 40  லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள்  இந்த தோல் மற்றும் தோல் தயாரிப்புகள்  சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

* 10% தங்க நகைகள், ரூ.100 கோடி பம்புகள் பிசினஸ் போச்சு....

இந்தியாவில்  இருந்து அமெரிக்காவிற்கு ரூ.7 லட்சம் கோடி அளவிலான பொருட்கள் ஏற்றுமதி  செய்யப்படுகிறது. அதில் கணிசமான பங்கு தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி  செய்யப்படுகிறது. குறிப்பாக கோவையில் இருந்து ஜவுளி பொருட்கள், ஆடைகள்,  தங்கம், வைர ஆபரணங்கள், வெட் கிரைண்டர்கள், மோட்டார் பம்புசெட்கள், வாகன  உதிரி பாகங்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவை அதிகளவில் ஏற்றுமதி  செய்யப்படுகின்றன.

குறிப்பாக பல கோடி ரூபாய் அளவிலான ஜவுளிப்பொருட்கள்  அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவையில் இருந்து  ஏற்றுமதி செய்யப்படும் தங்க நகைகளில் 10 சதவீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி  செய்யப்படுகிறது. இதேபோல மோட்டார் பம்புகள் ரூ.50 முதல் 100 கோடி வரை  அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வர்த்தகம் எல்லாம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.