டிரம்ப்பின் 100% வரி விதிப்பு மிரட்டல்; வர்த்தக தடைகள் மேலும் பிரச்னையை சிக்கலாக்கும்: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி
பீஜிங்: ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்க டிரம்ப் அழைப்பு விடுத்திருப்பது தொடர்பாக சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே பல ஆண்டுகளாக வர்த்தகப் போர் நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம், சீனப் பொருட்கள் மீது தொடர்ந்து கூடுதல் வரிகளை விதித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில், இரு நாடுகளும் மாறி மாறி 100% வரை வரி விதிப்பில் ஈடுபட்ட நிலையில், மே மாதம் தற்காலிக வர்த்தகப் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இருப்பினும், பென்டானில் ஏற்றுமதி போன்ற காரணங்களைக் கூறி, சீனப் பொருட்கள் மீது 145% வரை டிரம்ப் மீண்டும் வரி விதித்தார். இதேபோல், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீதும் சமீபத்தில் கூடுதலாக 25% வரியை அமெரிக்கா விதித்தது. இந்தத் தொடர் நடவடிக்கைகள் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.இந்தச் சூழலில், ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ரஷ்யாவின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளான சீனா மற்றும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் டிரம்ப் இறங்கியுள்ளார். ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடனான சந்திப்பின்போது, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா மற்றும் இந்தியாவின் பொருட்கள் மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். டிரம்பின் இந்த மிரட்டலுக்கு சீனா தரப்பில் பதிலடி கொடுகப்பட்டுள்ளது.
ஸ்லோவேனியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, ‘வர்த்தக போர்களை சீனா திட்டமிடுவது இல்லை; பங்கேற்பதும் இல்லை. வர்த்தகப் போரினால் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாது. தடைகள் பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். டிரம்பின் அழைப்பை ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஏற்கத் தயக்கம் காட்டி வரும் நிலையில், டிரம்பின் புதிய வரி விதிப்பு மிரட்டல், உலக வர்த்தகத்தில் மீண்டும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.