Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் 50 சதவீத வரியால் விரிசல்: டிரம்ப் - மோடி மீண்டும் நெருக்கம்

அவர் எனக்கு நல்ல நண்பர்: டிரம்ப்

நேர்மறை உணர்வை பாராட்டுகிறேன்: மோடி

நியூயார்க்: அமெரிக்காவின் 50 சதவீத வரியால் விரிசல் ஏற்பட்ட நிலையில் டிரம்ப், மோடி இடையே மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது மொத்தம் 50 சதவீத கூடுதல் வரியை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதால் இருநாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது. இதுபற்றி பேச பிரதமர் மோடியை 4 முறை டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் அதை மோடி புறக்கணித்ததாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து டிரம்ப் இந்தியாவுடனான வர்த்தகம் பேரழிவு என்று விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் ஒன்றாக இணைந்து பேசிய புகைப்படம் வெளியான நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்த டிரம்ப்,’ இந்​தி​யா​வை​யும், ரஷ்​யா​வை​யும் மோச​மான சீனா​விடம் நாம் இழந்​து​விட்​டது போல் தெரி​கிறது. அந்த நாடு​கள் எதிர்காலத்​தில் வளமாக இருக்​கட்​டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி எப்ேபாதும் எனக்கு நெருங்கிய நண்பர் தான் என்று குறிப்பிட்டு இருப்பது பிரதமர் மோடியும், டிரம்ப்பும் மீண்டும் நெருங்குவதை உறுதி செய்துள்ளது. வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பிடம், ‘இந்தியாவுடன் உறவை புதுப்பிப்பீர்களா?’எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து டிரம்ப் கூறுகையில்,‘நான் எப்போதும் அதனை செய்வேன். நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்தத் தருணத்தில் அவருடைய செயல் எனக்குப் பிடிக்கவில்லை.

இருப்பினும், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மிகவும் சிறப்பாகவே உள்ளது. அதனால், இது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதாவது இதுபோன்ற தருணங்கள் ஏற்படுவதுண்டு. இந்தியா ரஷ்யாவிலிருந்து இவ்வளவு எண்ணெய் வாங்குவது குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், அதை நான் அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன். நாங்கள் இந்தியாவின் மீது மிகப் பெரிய வரியை விதித்தோம், 50 சதவீத வரி, மிக அதிக வரி. நான் மோடியுடன் நன்றாகப் பழகுகிறேன், அவர் மிகச் சிறந்தவர். அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு இருந்தார். மற்றபடி, நான் எப்போதும் மோடியுடன் நன்றாகப் பழகி வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் அமெரிக்கா வந்து சென்றார். இந்தியாவுடனும் பிற நாடுகளுடனும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம். அவர்கள் அனைவருடனும் நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம்.

கூகிள் நிறுவனத்தில் மட்டுமல்ல, எங்கள் பெரிய நிறுவனங்கள் அனைத்திலும் நடப்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நாங்கள் வருத்தப்படுகிறோம்.’ என்றார். இதற்கு பிரதமர் மோடியும் உடனடியாக பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில்,‘அதிபர் டிரம்ப்பின் உணர்வுகளையும், இந்தியா - அமெரிக்கா உறவுகள் குறித்த அவரது நேர்மறையான மதிப்பீட்டையும் நான் ஆழமாகப் பாராட்டுகிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் மிக நேர்மறையான, முன்னோக்குச் சிந்தனையுடன் விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன’ என்று குறிப்பிட்டு உள்ளார். டிரம்ப் கருத்துக்கு பிரதமர் மோடி மதிப்பு அளிக்கும் வகையில் உடனே பதில் அளித்து இருப்பது இருவரும் மீண்டும் நெருக்கமான உறவை தொடர விரும்புவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி உள்ளது.

மோடியின் அமெரிக்க பயணம் ரத்து

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத்தொடர் வரும் 9ஆம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முதன்முறையாக செப்டம்பர் 23ம் தேதி உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலைவர்கள் செப்டம்பர் 26ம் தேதி உரையாற்றவுள்ளனர். இந்த ஆண்டு நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்கா செல்லவுள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட உரையாற்றுவோர் பட்டியலில், பிரதமர் மோடி செப்டம்பர் 26ம் தேதி உரையாற்றுவார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட பட்டியலில், செப்டம்பர் 27ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால், பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா உறவை மோடி மதிக்கிறார்

அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அதிபர் டிரம்ப்புடன் எப்போதும் வலுவான தனிப்பட்ட உறவை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில்,’அமெரிக்காவுடனான நமது நல்லுறவுக்கு பிரதமர் மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். அதிபர் டிரம்ப் விஷயத்தில், பிரதமர் மோடி எப்போதும் மிகச் சிறந்த தனிப்பட்ட நல்லுறவைக் கொண்டுள்ளார். ஆனால் விஷயம் என்னவென்றால், நாங்கள் அமெரிக்காவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்த நேரத்தில், அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது’ என்றார்.