கரகாஸ்: வெனிசுலா நாட்டில் இருந்து போதைப் பொருள் அதிகம் கடத்தப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அதுமட்டுமின்றி, ஒருபக்கம் அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் போதைப்பொருள் கடத்தி வந்த கப்பலை அமெரிக்க கடற்படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். ஆனால், இந்த குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மறுத்து உள்ளார். கப்பல்களில் பயணித்தவர்கள் மீனவர்கள் என்றும், சர்வதேச சட்டத்தை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தால், கரீபியன் கடற்பகுதியில் போர்க் கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது. அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகளால் கோபமடைந்த வெனிசுலா, பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. அதன்படி, சிறப்பு அவசரநிலையை அந்நாட்டின் அதிபர் அறிவித்து உள்ளார். இந்த நிலையில்,வெனிசுலாவின் போதை கடத்தல் கும்பலான கார்டெல் டி லாஸ் சோல்ஸ்-ஐ தீவிரவாத அமைப்பாக அறிவிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். இதனால் கரீபியன் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
* ரூ.445 கோடி பரிசு
இதற்கிடையே, நிகோலஸ் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் வெனிசுலா தலைநகரின் மீது துண்டு பிரசுரங்களை வீச அமெரிக்க ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரோவை கைது செய்யவும், தண்டனைக்கு வழி வகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு வெகுமதி வழங்குவது உள்ளிட்ட விவரங்கள் துண்டு ப பிரசுரங்களில் இடம் பெற்றுள்ளன. மதுரோ பற்றிய தகவல்களை அளிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகையை ரூ.445 கோடியாக அமெரிக்கா அதிகரித்துள்ளது.



