Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

டிரம்பின் கொள்கைகளை கண்டித்து ‘மன்னராட்சி வேண்டாம்’ முழக்கத்துடன் வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம்: அமெரிக்கா முழுவதும் பரபரப்பு

வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளைக் கண்டித்து, அமெரிக்கா முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, அவரது நிர்வாகத்தின் குடியேற்றம், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல், கூட்டாட்சி செலவினங்கள், வெளிநாட்டு நிதியுதவி மற்றும் சுகாதாரக் காப்பீட்டு மானியங்கள் தொடர்பாக கட்சிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. 19வது நாளாக நீடிக்கும் இந்த முடக்கத்தால், கூட்டரசு ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், அதிபர் டிரம்பின் தன்னிச்சையான சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து, ‘மன்னர்கள் வேண்டாம்’ (No Kings) என்ற பெயரில், நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அரசு முடக்கத்தால் பாதிக்கப்பட்ட கூட்டரசு ஊழியர் சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் இந்தப் போராட்டங்கள், இசைக்குழுக்கள் மற்றும் காற்றடைக்கப்பட்ட விநோத பலூன் உடைகளுடன் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன. போராட்டக்காரர்கள், ‘போராடுவதை விட தேசபக்தி வேறில்லை’, ‘பாசிசத்தை எதிர்ப்போம்’ மற்றும் அமெரிக்க அரசியலமைப்பின் முகவுரையான ‘மக்களாகிய நாங்கள்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இந்தப் போராட்டங்கள் குறித்து டிரம்ப் தரப்பில் இருந்து கேலியான எதிர்வினை வந்துள்ளது. அதிபர் கிரீடத்துடன் மன்னர் போல உடையணிந்திருக்கும் காணொலி ஒன்றை அவரது தேர்தல் பிரசார சமூக ஊடகக் கணக்கு வெளியிட்டு, போராட்டத்தைக் கிண்டல் செய்துள்ளது. மேலும், குடியரசுக் கட்சியின் தேசியக் குழு, இந்தப் போராட்டங்களை ‘அமெரிக்காவை வெறுக்கும் பேரணிகள்’ என முத்திரை குத்தியுள்ளது.