வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி விரைவில் நேரில் சந்திக்க உள்ளதாக அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இன்று தெரிவித்துள்ளார். இந்திய பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், 50 சதவீத வரி விதித்து உத்தரவிட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்வதை டிரம்ப் மற்றும் அந்நாட்டு அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, சில நாள்களுக்கு முன் இந்தியாவுடனான நட்புறவு தொடர்கிறது என்று தெரிவித்த டிரம்ப், பிரதமர் மோடியின் பிறந்த நாளன்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டிரம்ப்-மோடி விரைவில் நேரில் சந்திக்க உள்ளதாக அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் பேசியதாவது: மோடி-டிரம்ப் நேரில் சந்திப்பதை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். அவர்கள் மிகவும் நேர்மறையான உறவை கொண்டுள்ளனர். இந்தோ - பசிபிக் கூட்டமைப்பின் க்வாட் உச்சி மாநாட்டுக்கான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறலாம். டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
தொடர்ந்து உயர்நிலை அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றன. இந்தியாவுடனான உறவை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக வாஷிங்டன் கருதுகிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சராக மார்கோ ரூபியோ பதவியேற்றவுடன் செய்த முதல் பணியாக, க்வாட் கூட்டமைப்பு நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன் ஆலோசனை நடத்தினார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தினார். அதிபராக டிரம்ப் பதவியேற்ற 2 வாரங்களுக்குள் வெளிநாட்டில் இருந்து வந்த முதல் தலைவர் பிரதமர் மோடிதான். இவ்வாறு அவர் பேசினார்.