புதுடெல்லி: உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியா வரும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் கைவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் போர் நடந்த சமயத்தில் சமரசம் செய்யும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிடுவதை பிரதமர் மோடி விரும்பாததால்தான் இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வரி விவகாரத்தால் இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் பிரதமர் மோடி அழைப்பை நிராகரித்துள்ளார்.
இதனால், டிரம்பும் இந்தியா வர விரும்பவில்லை என நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் குவாட் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில் டிரம்ப் பங்கேற்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தான் உட்பட பல போர்களை நிறுத்தியதற்காக அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டுமென இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுபோன்ற பரிந்துரையை வழங்க பிரதமர் மோடி மறுத்ததால்தான் இந்தியா மீது அதிக வரியை டிரம்ப் விதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.