அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்து; நள்ளிரவில் வெடித்து சிதறிய ‘காஸ்’ சிலிண்டர்கள்: ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் மோதிய விபத்தில், எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் எரிவாயு டேங்கர் லாரி ஒன்று மற்றொரு லாரியுடன் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அதேபோன்ற கோர விபத்து நேற்று இரவு, இதே சாலையில் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று மற்றொரு லாரியுடன் மோதியதில் தீப்பிடித்தது. இந்தத் தீ மளமளவெனப் பரவி, லாரியில் இருந்த சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறின. பல கிலோமீட்டர் தூரத்திற்கு தீப்பிழம்புகளும், வெடிச்சத்தமும் கேட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் பிரேம் சந்த் பைரவா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அப்போது அவர், ‘விபத்துக்குள்ளான லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களைக் காணவில்லை. அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்பு குறித்த எந்தத் தகவலும் இல்லை’ என்றார்.