Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பகல் நேரத்தில் லாரிகள் வர தடை எதிரொலி நெல்லை நயினார்குளம் மார்க்கெட் மொத்தமாக மூடல்

*75 சதவீதம் கடைகள் திறப்பு

நெல்லை : நெல்லை மாநகர பகுதிக்குள் கனரக வாகனங்கள் பகல் நேரத்தில் வருவதற்கு தடை விதித்ததை ரத்து செய்யக்கோரி, டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் கடைகள் மொத்தமாக மூடப்பட்டிருந்தன. எனினும் பெரும்பாலான வணிகர்கள் நேற்று நெல்லை டவுனில் வழக்கம்போல் கடைகளை திறந்து வியாபாரத்தை நடத்தினர். இதனால் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்திருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு போதிய ஆதரவு இல்லாமல் போனது.

நெல்லை மாநகர பகுதியில் லாரிகள் மூலமாக சரக்கு ஏற்றி, இறக்குவதற்கு மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரையும் முன்பு கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது அதனை மாற்றி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே சரக்குகளை மாநகர பகுதிக்குள் இறக்கிட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து, அதை செயல்படுத்தி வருகிறது.

மேலும் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், சரக்குகளை கொண்டு வரும் லாரிகள் பேட்டை கனரக வாகன முனையத்தில் பொருட்களை இறக்கி வைத்துக் கொண்டு, சிறிய வாகனத்தில் ஏற்றி வந்து கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் டவுன் வணிகர்கள் பாதிக்கப்படுவதாகவும், ஏற்று கூலி, இறக்கு கூலி அடிப்படையில் கூடுதல் செலவீனங்கள் ஏற்படுவதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். இந்நிலையில் வியாபாரிகள் சங்கத்தின் ஒரு தரப்பினர் நேற்று (7ம் தேதி) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, கடையடைப்புக்கு வாய்ப்பில்லை என நெல்லையில் தெரிவித்ததோடு, மாவட்ட நிர்வாகத்துடன் பேசி தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நெல்லை மாநகரில் நேற்று வழக்கம்போல் கடைகள் காலை முதலே திறக்கப்பட்டன. டவுன் ரதவீதிகளில் பல கடைகள் வழக்கம் போல் இயங்கின. தீபாவளி நெருங்கி வரும் நிலையில் அனைத்து வணிக நிறுவனங்களும் வழக்கம்போல் செயல்படும் என நெல்லை வடக்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நெல்லை மாநகர அனைத்து பகுதி வியாபாரிகள் நலச்சங்கத்தினர், நெல்லை இந்து வியாபாரிகள் நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

அதன்படி பலசரக்கு, பூஜை பொருட்கள், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு கடைகள் நெல்லை டவுனில் வழக்கம்போல் திறந்து வியாபாரத்தை நடத்தின. பொதுமக்களும் காலை முதலே பொருட்களை வாங்கி சென்றனர்.

அதே நேரத்தில் நெல்லை டவுன் மாட வீதியில் ஒரு சில மொத்த வியாபார கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நெல்லை மாநகரில் 75 சதவீத கடைகள் திறக்கப்பட்டதால், மொத்த கடையடைப்பு போராட்டத்திற்கு வழியில்லாமல் போனது.

எனினும் நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டை பொறுத்தவரை நேற்று அங்குள்ள 90 கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நயினார்குளம் மார்க்கெட் பொதுவாக அதிகாலை 3 மணிக்கே திறந்து செயல்படும். கடையடைப்பு போராட்டம் காரணமாக நேற்று அதிகாலையில் கடைகள் திறக்கப்படவில்லை.

நேற்று மாலை 6 மணி வரை கடைகள் நயினார்குளம் மார்க்கெட்டில் அடைக்கப்பட்டிருந்தன. நயினார்குளம் மார்க்கெட் அடைப்பால் கேரள மாநிலத்திற்கு காய்கறிகள் கொண்டு செல்வது தடைப்பட்டது. உள்ளூர் காய்கறி சப்ளையும் ஓரளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தது.