திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து அரக்கோணத்தில் உள்ள எம்ஆர்எப். தொழிற்சாலைக்கு கார்பன் துகள்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்கவேல் (54) என்பவர் ஓட்டிச்சென்றார். அப்போது திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த சிமென்ட் கலவை லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் லாரிகளின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. இதில் சிமென்ட் கலவை லாரியை ஓட்டிவந்த டிரைவர் குருமூர்த்தி (45) என்பவர் இரண்டு லாரிகள் இடையே சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தார்.
இந்த விபத்து பார்த்து வாகன ஓட்டிகள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவள்ளூர் தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து ஜேசிபி உதவியுடன் இரண்டு லாரிகள் இடையே சிக்கியிருந்த குருமூர்த்தியை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர் எந்தவித காயம் இன்றி தப்பினார். இந்த விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்தனர். டிரைவர் குருமூர்த்தி தூங்கியதால் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது.