துறையூர்: திருச்சி அருகே புளியஞ்சோலையில் கரடி உலா வந்ததாக வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புளியஞ்சோலை உள்ளது. சுற்றுலா தலமான இங்கு தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் புளியஞ்சோலை பவர் ஹவுஸ் கட்டிடம் அருகே ஒரு கரடி உலா வருவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அந்த பகுதியில் கரடி இருக்கிறதா என்பதை அறியும் வரை புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கோ, சுற்றி பார்ப்பதற்கோ அனுமதி கிடையாது என்று நாமக்கல் மாவட்ட வனச்சரக அதிகாரி மாதவி யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விடுமுறையான இன்று (ஞாயிற்றுக்கிழமை) புளியஞ்சோலைக்கு துறையூர் மட்டுமின்றி திருச்சி, நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவர் என்பதால் அவர்களின் பாதுகாப்பு கருதி புளியஞ்சோலை சுற்றுலா தலத்துக்கு வருவதற்கு அனுமதி வழங்கவில்லை.