சார்ஜா: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி.20 தொடர் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 4வது லீக் போட்டியில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதின. முன்னதாக ஆப்கன் நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கன் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் எடுத்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 65 (45பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), செடிகுல்லா அடல் 64 ரன் (45பந்து) அடித்தனர். பாகிஸ்தான் பவுலிங்கில் ஃபஹீம் அஷ்ரஃப் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில், பவுலர் ஹரிஸ் ரவூப் நாட் அவுட்டாக 34(16பந்து), பகார் ஜமான் 25, கேப்டன் சல்மான் ஆகா 20, சாஹிப் சாதா ஃபர்ஹான் 18 ரன் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. 20ஓவரில் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களே எடுத்தது. இதனால் 18 ரன் வித்தியாசத்தில் ஆப்கன் வெற்றிபெற்று முதல் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக்கொண்டது. அந்த அணியின் பவுலிங்கில் கேப்டன் ரஷித்கான், பரூக்கி, முகமது நபி, நூர் அகமது தலா 2 விக்கெட் எடுத்தனர். இப்ராஹிம் சத்ரான் ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை பாகிஸ்தான்-யுஏஇ அணிகள் மோதுகின்றன.