கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜோதிப்பிரியோ மல்லிக் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜோதிப்பிரியோ மல்லிக் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் திடீரென ஒருவர் எம்எல்ஏவின் வீட்டிற்குள் நுழைந்தார். வீட்டில் இருந்த எம்எல்ஏ மீது பாய்ந்த அவர் அவரது வயிற்றில் குத்தினார்.
இதனால் எம்எல்ஏ அலறிக்கூச்சலிட்ட நிலையில் அவரது பாதுகாவலர்கள் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் அங்கு விரைந்து அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அந்த நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அவர் வடக்கு 24பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஹப்ரா பகுதியை சேர்ந்தவர் என்றும் வேலை நிமித்தமாக எம்எல்ஏவிடம் பேச விரும்பியதாகவும் தெரிவித்தார். மேலும் விசாரணையில் அவர் அரசு மருத்துவமனையின் மனநல சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றதும் தெரியவந்தது. மற்ற பார்வையாளர்களை போலவே அவரும், எம்எல்ஏவை சந்திக்க சென்றதாகவும் திடீரென தாக்கியதாகவும் தெரிகின்றது.
 
 
 
   