மேற்குவங்க மக்களுக்கு எதிராக பேசிய ‘பாஜக எம்எல்ஏ வாயில் ஆசிட் ஊற்றுவேன்’: திரிணாமுல் எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை
புதுடெல்லி: பாஜக எம்எல்ஏ வாயில் ஆசிட் ஊற்றுவேன் என்று மிரட்டல் விடுத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ, தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அப்துர் ரஹீம் பாக்ஸி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் பேசுகையில், ‘பாஜக எம்எல்ஏ சங்கர் கோஷ் வாயில் ஆசிட்டை ஊற்றுவேன்’ என்று பேசிய வீடியோ வைரலானது.
இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பாக்ஸி தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘சட்டமன்றத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ சங்கர் கோஷ், புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று குறிப்பிட்டார். இது முற்றிலும் தவறானது. நாங்கள் இந்தியர்கள், நாங்கள் வங்காளிகள். அவர் எப்படி இப்படிக் கூறலாம்? இது வங்காளிகளையும், வங்காளத்தையும் அவமதிக்கும் செயல். அதனால்தான் நான் அவ்வாறு பேசினேன். ஒரு வங்காள சட்டமன்ற உறுப்பினரே வங்காளிகளுக்கு எதிராகப் பேசலாமா? அதனால்தான், அவரது தொண்டை அடைபட்டுப் போகும் அளவுக்கு ஆசிட் ஊற்ற வேண்டும் என்று கூறினேன்’ என்றார்.
இந்த விளக்கத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக எம்எல்ஏ சங்கர் கோஷ், ‘இவர்களைச் சட்டமன்ற உறுப்பினர்கள் என்பதா அல்லது குற்றவாளிகள் என்பதா என்று தெரியவில்லை. மம்தா பானர்ஜி இந்த மாநிலத்தை எப்படி நடத்துகிறார் என்பதற்கு இந்த எம்எல்ஏவின் பேச்சே சாட்சி. மேற்கு வங்கத்தில் பரவியுள்ள குண்டர்களின் அட்டகாசத்தைத் தலிபான்களின் ஆட்சியுடன்தான் ஒப்பிட முடியும். இதுபோன்ற ஒரு ஆட்சியைத்தான் மம்தா பானர்ஜி, மதநல்லிணக்க அரசியல் மற்றும் அச்சுறுத்தல் மூலம் நிறுவ முயற்சிக்கிறார்’ என்று விமர்சித்துள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவர் சுபாங்கர் சர்க்கார் கூறுகையில், ‘அவருக்கும் (அப்துர் ரஹீம்) ஒரு குற்றவாளிக்கும் என்ன வேறுபாடு? பாக்ஸியை அவரது கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், ‘பாக்ஸியின் பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது’ என்று கூறினாலும் மாநிலத்தில் அரசியல் சர்ச்சை தொடர்கிறது.