போலி ஆவணங்கள் தயார் செய்து தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை: திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி: போலி ஆவணங்கள் தயார் செய்து தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (53). இவர், குறிப்பிட்ட சமூக மக்களுக்கான சலுகைகளை பெறுவதற்காக போலி ஆவணங்கள் தயார் செய்து, கடந்த 2023ல் இருங்களூரில் உள்ள 9வது வார்டு தேர்தலில் போட்டியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மண்ணச்சநல்லூர் தாலுகா புறத்தாக்குடியை சேர்ந்த வேல்முருகன் (31) சமயபுரம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் 2023 பிப்.16 அன்று வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் வாதங்கள் முடிந்து, திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், ஜெயந்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும். ₹2000 அபராதமும் வழங்கி நேற்று தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக சமயபுரம் இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் கோர்ட் காவலர் விக்னேஷ் ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.