திருச்சியில் எஸ்ஐ வீட்டில் புகுந்து வாலிபர் கொலை போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய 3 பேருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு: டாட்டூ குத்தி சபதம், சுட்டு பிடிக்கப்பட்டவர் பற்றி பகீர்
திருச்சி: திருச்சியில் போலீஸ் அதிகாரி வீட்டில் தஞ்சம் புகுந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தப்பியோடிய 3 பேருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி குறித்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி பீமநகர் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்(26). ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சைட் சூபர்வைசராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்புக்குள் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் தஞ்சம் புகுந்த தாமரைசெல்வனை, விரட்டி வந்த 5 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து சரமாரி வெட்டி கொன்றது.
இதுதொடர்பாக பாலக்கரை போலீசார் திருவனைக்காவல் காந்திதெருவை சேர்ந்த இளமாறன் (19) என்பவரை கைது செய்தனர். இதில் தப்பியோடிய 4 பேரை தேடி வந்தனர். முக்கிய குற்றவாளியான ஸ்ரீரங்கம் ேநதாஜி தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (26), ஸ்ரீரங்கம் கொள்ளிடம் நீரேற்று நிலையம் அருகே பதுங்கி இருந்ததாக வந்த தகவலின் பேரில் நேற்றுமுன்தினம் இரவு போலீஸ்காரர்கள் மாதவராஜ்(32), ஜார்ஜ் வில்லியம்(37) ஆகியோர் அங்கு சென்றபோது சதீஷ்குமார் இருவரையும் வெட்டிவிட்டு தப்ப முயன்றார்.
தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சதீஷ்குமாரின் வலதுகால் முட்டியில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதே போல் காயமடைந்த போலீஸ்காரர்கள் மாதவராஜ், ஜார்ஜ் வில்லியம் ஆகியோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளியான திருவனைக்காவல் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (24), மண்ணச்சநல்லூர் சிறுகாம்பூரை சேர்ந்த கணேசன் (18), ஸ்ரீரங்கம் கீழக்கொண்டையாம்பேட்டையை சேர்ந்த நந்தகுமார்(20) ஆகியோரை கைது செய்ய போலீசார் அவர்களது வீடுகளுக்கு நேற்று நேரில் சென்றனர். அப்போது அவர்கள், போலீசார் பிடியில் இருந்து தப்பியோட முயன்றனர்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கணேசன், பிரபாகரன் ஆகியோருக்கு காலில் எலும்பு முறிவும், நந்தகுமாருக்கு கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. பின்னர் 3 பேரையும் கைது செய்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான சதீஷ்குமாரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், ‘சதீஷ்குமார் திருச்சி விமான நிலையம் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சதீஷ்குமாரை பொது இடத்தில் வைத்து தாமரைச்செல்வன் அடித்ததால் அவமானத்தில் தாமரைசெல்வனை பழிதீர்க்க அந்த இடத்திலேயே ‘சபதம்’ எடுத்துள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நண்பர்களிடமும் விரைவில் தாமரை செல்வனுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என கூறி வந்துள்ளார். இதற்காக, சதீஷ்குமார் ‘கடவுளின் உருவத்தை’ டாட்டூ வரைந்துள்ளார். தாமரைசெல்வனை பழிதீர்த்த பின்னர் தான் கோயிலுக்கு செல்வதாகவும் கூறி வந்துள்ளார். முழு விசாரணைக்கு பின்னர் தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றனர்.
