Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருச்சியில் 2.3 ஏக்கரில் அமைகிறது ரூ.5.5 கோடியில் நவீன மினி விளையாட்டு மைதானம்: டெண்டர் கோரியது மாநகராட்சி; 8 மாதத்தில் பணியை முடிக்க திட்டம்

திருச்சி: திருச்சியில் 2.3 ஏக்கர் பரப்பளவில் ரூ.5.5 கோடி மதிப்பில் நவீன மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான டெண்டரை மாநகராட்சி நிர்வாகம் கோரியுள்ளது. இந்த பணிகளை 8 மாதத்தில் முடிக்க திட்டமிப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் அண்ணா விளையாட்டு அரங்கம் தவிர வேறு விளையாட்டு அரங்கங்கள் ஏதும் இல்லாத நிலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், மாநகரப்பகுதிகளில் முக்கியமான குடியிருப்பு பகுதிகளில் சிறிய அளவிலான விளையாட்டு அரங்கங்களை அமைக்க மாநகராட்சி சார்பில் திட்டங்கள் வகுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் திருச்சி அண்ணாநகர் உழவர் சந்தை அருகே 2.3 ஏக்கர் பரப்பளவில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்தில், நீச்சல் கற்றுக்கொள்பவர்கள் மற்றும் நீச்சல் பயிற்சி பெற விரும்புவர்கள் பயன்பாட்டை கருத்தில் கொண்டு நவீன நீச்சல் குளமும் அமைக்கப்படவுள்ளது. மேலும் உள்விளையாட்டு அரங்க (Indoor Games) விளையாட்டுகளான பூப்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுக்கான அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது.

இந்த விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையிலான அதிநவீன உள்விளையாட்டு அரங்கங்களாக இவை அமைக்கப்படும். இதில் நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடமும் கட்டப்படவுள்ளது. இது உடற்கட்டமைப்பு (ஆணழகன்) போட்டிகள் மற்றும் வலு தூக்கும் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு பயிற்சி எடுக்கும் வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும். இவர்களுக்கு மட்டுமல்லாது, உடல் எடையை சீராக வைத்து, உடல் ஆரோக்கியத்தை பேண நினைக்கும் பொதுமக்களுக்கும் இந்த உடற்பயிற்சி மையம் வரப்பிரசாதமாக இருக்கும். இந்த பணிகளை டிசம்பர் மாதத்தில் துவங்கி, 8 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5.5 கோடி மதிப்பில் டெண்டர் கோரி, சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.