திருச்சி அருகே பயங்கரம் பொதுஇடத்தில் கன்னத்தில் அறைந்த கள்ளக்காதலனை குத்தி கொன்ற காதலி: கணவருடன் கைது
திருவெறும்பூர்: திருச்சி அருகே பொது இடத்தில் கன்னத்தில் அறைந்த கள்ளக்காதலனை குத்தி கொலை செய்த பெண், தனது கணவருடன் கைது செய்யப்பட்டார். திருச்சி அடுத்த திருவெறும்பூர் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(50). இவரது மனைவி மகேஸ்வரி. ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். தம்பதி இடையே கருத்து வேறுபாட்டால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனால் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனியார் பஸ் டிரைவரான ரமேஷ்குமாருக்கு, அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (45) என்பவருடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மாரியம்மன் கோயில் அருகே ரமேஷ்குமார், லட்சுமியுடன் ேபசி கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ரமேஷ்குமார், லட்சுமியின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த லட்சுமி, தனது கணவர் வீரமுத்துவிடம் (52) நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த வீரமுத்து, ரமேஷ்குமாரை தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த பகுதி மக்கள், அவர்களை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர்.
வீட்டுக்கு வந்த ரமேஷ்குமார், அந்த பகுதியில் வசித்து வரும் தனது மைத்துனர் தியாகராஜனின் மகன் ரோகித்சர்மா வீட்டுக்கு நள்ளிரவு சென்றார். அவரிடம் செல்போன் வாங்கி கொண்டு ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்றார். அவரை ரோகித்சர்மா தேடி சென்ற போது, வீரமுத்து வீட்டின் எதிரே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரமேஷ்குமார் தலையில் மூன்று இடத்திலும், இடது விலா பகுதியில் 6 இடத்திலும், கையில் 5 இடத்திலும் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவலின்படி திருவெறும்பூர் போலீசார் ரமேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரிக்க போலீசார் வீரமுத்து வீட்டுக்கு சென்ற போது, தலை உள்ளிட்ட மூன்று இடங்களில் லேசான கத்திக்குத்து காயத்துடன் கிடந்த வீரமுத்துவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், ரமேஷ்குமார், வீரமுத்து வீட்டுக்கு சென்றபோது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் மாறி, மாறி கத்தியால் குத்திக்கொண்டனர். வீரமுத்து மனைவி லட்சுமியும் ரமேஷ்குமாரை கட்டையால் தாக்கி உள்ளார். இதில் ரமேஷ்குமார் உயிரிழந்தார். வெளியில் யாருக்கும் தெரியாமல் இருக்க கணவன், மனைவியும் சேர்ந்து ரமேஷ்குமார் உடலை தண்டவாளத்தில் போட்டு சென்றனர். இந்த சம்பவத்தில் வீரமுத்து, லட்சுமி கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.