திருச்சி: நீதிமன்றத்தில் ரவுடிகளுக்குள் கட்டி புரண்டு ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி விசாரணை பாதிப்பால் குமாஸ்தா புகாரில் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். திருச்சி நீதிமன்றம் பின்புறம் உள்ள தனி கட்டிடத்திலுள்ள 6 கோர்ட்டுகள் நேற்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த நிலையில் முதல் தளத்தில் கோர்ட் எண்.6ல் நீதிபதி சுப்ரமணியன் குற்ற வழக்குகளை விசாரித்து கொண்டிருந்தார்.
அப்போது வெளியே வராண்டாவில் கூச்சல், குழப்பமாக இருந்ததால் கோபமடைந்த நீதிபதி, விசாரணையை உடனடியாக நிறுத்தி விட்டு விசாரித்தபோது சரித்திர பதிவேடு குற்றவாளிகளான 2 ரவுடிகள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதும், கட்டிப்பிடித்து தரையில் உருண்டதும் தெரிய வந்தது. நீதிபதி உத்தரவின் பேரில் 2 ரவுடிகளும் சாட்சிகள் கூண்டில் ஏற்றப்பட்டனர்.
விசாரணைக்கு பின்னர் மோதல் சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி, நீதிமன்ற தலைமை குமாஸ்தாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட் தலைமை குமாஸ்தா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்,‘‘திருச்சி பாலக்கரையை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நாகராஜ் (25), வழக்கு தொடர்பாக வக்கீல் ஒருவரை பார்க்க வந்துள்ளார்.
இதே போல் உய்யக்கொண்டான் திருமலையை சேர்ந்த ரவுடி பிராங்கிளின் (26), வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக வந்த நண்பர் ஒருவரை பார்க்க வந்துள்ளார். 2 ரவுடிகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது ஏற்கனவே இருந்த முன்விரோத தகராறில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். கோர்ட் தலைமை குமாஸ்தா கொடுத்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
