திருச்சியில் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் குத்தகை பாக்கியில் ரூ.20 கோடியை உடனே அரசுக்கு செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி : திருச்சியில் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் குத்தகை பாக்கியில் ரூ.20 கோடியை உடனே அரசுக்கு செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி காஜாமலை பகுதியில் SRM ஹோட்டல் இருந்தது. இந்த ஹோட்டல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான 4.3 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டது. 1994 முதல் 30 வருட குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹோட்டல் இயங்கி வந்தது. 30 வருட குத்தகை காலம் 2022ஆம் ஆண்டு முடிந்தது.குத்தகையை புதுப்பிக்க SRM ஹோட்டல் நிர்வாகம் தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பித்தது. ஆனால், தமிழக அரசு அதை நிராகரித்தது. மேலும், ஹோட்டலை காலி செய்யும்படி SRM ஹோட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து SRM நிறுவனம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸிற்கு இடைக்கால தடை விதித்தார்.
இதையடுத்து, தமிழக அரசு, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனி நீதிபதி அளித்த தடையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குத்தகை காலம் முடிந்த பிறகு, கால நீட்டிப்பு கேட்பதை உரிமையாக கருத முடியாது என்று கூறிய நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான இடத்தை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை எதிர்த்து SRM ஹோட்டல் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதில், "எஸ்.ஆர்.எம்., ஓட்டலுக்கு வழங்கப்பட்ட குத்தகை காலம் 2024 ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. எனவே, தொடர்ந்து உரிமை கோர முடியாது. எஸ்.ஆர்.எம். ஓட்டல் குழுமம் ரூ.38 கோடி குத்தகை பாக்கி வைத்துள்ளது," என தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், குத்தகை பாக்கி ரூ.38 கோடியில் ரூ.20 கோடியை உடனே செலுத்தினால்தான் இந்த வழக்கை விசாரிக்க முடியும் என ஆணையிட்டது. மேலும், ரூ.20 கோடி செலுத்தப்பட்டதற்கான ஆவணங்களை எஸ்.ஆர்.எம். ஓட்டல் குழுமம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.